சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில் ஆசிரியர் பதவிக்கு மகேந்திர சிங் தோனி விண்ணப்பித்துள்ளார்.
இதை கேட்க வினோதமாக இருக்கிறதா? இதைவிட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விண்ணப்பதாரர் தனது தந்தையின் பெயரில் சச்சின் டெண்டுல்கர் என்று நிரப்பியுள்ளார்.
குறித்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, எம்.எஸ். தோனி Durg நகரத்தில் உள்ள C.S.V.T.U பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஆசிரியர் பணிக்கான 14,850 காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்வுமுறை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நேர்காணலுக்கு வந்த 15 விண்ணப்பதாரர்களில் எம்.எஸ். தோனியும் ஒருவர்.
இருப்பினும், அவர் நேர்காணலுக்கு வராததால், அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் விண்ணப்பத்தில் இருந்த எண்ணை அழைத்தனர், அதன் பிறகே இந்த விண்ணப்பம் போலியானது என்பாதை அவர்கள் உணர்ந்தனர். இந்த வேடிக்கையான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், மற்ற விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் அது வைரலாகியது.
இந்த போலி விண்ணப்பதாரருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விண்ணப்பம் போலியானது என்று அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட போதிலும், அது எவ்வாறு நேர்காணல் வரை இந்த விண்ணப்பம் வந்தது என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை.