முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை சந்தியில் முகக்கவசம் அணியவில்லையென இளைஞர் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதால் அமைதியின்மை ஏற்பட்டது.
இன்று (04) இந்த சம்பவம் நடந்தது.
ஆனந்தபுரம் பகுதியில் இருந்து வைத்தியசாலைக்கு செல்வதற்காக இரணைப்பாலை சந்திக்கு முகக்கவசம் அணியாமல் சென்ற இளைஞரை வழிமறித்த சிப்பாய் ஒருவர், முகக்கசவம் அணிந்து செல்லுமாறு கூறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதையடுத்து அங்கு ஒன்று கூடிய மக்கள், சிப்பாய் எப்படி தாக்குதல் நடத்த முடியுமென கேள்வியெழுப்பினர். இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.