யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
2020 யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி காலிறுதி ஆட்டம் உக்ரைன், இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இத்தாலியில் உள்ளூர் நேரப்படி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே ஹாரி கேன் அற்புதமான கோல் அடிக்க இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் விழவில்லை.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. 46வது நிமிடத்தில் ஹாரி மெகுர் ஒரு கோல், அடுத்த 4வது நிமிடத்தில் கேன் மீண்டும் ஒரு கோல் அடிக்க இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
உக்ரனை வீரர்கள் செய்வதறியாது திகைத்துப்போக ஜோர்டன் ஹெண்டர்சன் 63வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு மேலும் ஒரு கோலை சேர்க்க உக்ரைன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி வரை உக்ரைன் ஒரு கோல்கூட அடிக்கவில்லை.
இதன்மூலம், இறுதியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற டென்மார்க் அரையிறுதிக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, டென்மார்க் அணிகள் வரும் 8ஆம் திகதி மோதுகின்றன.