இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தி 15 வயதான சிறுமியை பணத்திற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட மிஹிந்தலை பிரதேசசபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர்களிற்கு இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.
மஹிந்தலை பிரதேசசபை தலைவர் உடலை துணியால் மூடி, மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
நேற்று முன்தினம் கைதானவர்கள்-மஹிந்தலை பிரதேசசபை உப தவிசாளர், பொலன்னறுவையை சேர்ந்த மில்லியனரான தொழிலதிபர், சிறுமியை பாலியல் வர்த்தகத்திற்கு அழைத்து சென்ற வெள்ளவத்தை வாசி ஆகியோரே.
பொலன்னறுவை மில்லியனரான தொழிலதிபர், அங்கு அரச ஒப்பந்தங்களை பெற்று செய்து வரும் ஒப்பந்தக்காரர். அவருக்கு வயதில் குறைந்த கன்னிப் பெண்ணுடன் உடலுறவு கொள்ள ஏற்பட்ட விருப்பத்தினால் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
வயதில் குறைந்த கன்னிப் பெண் தேவையென அவர், இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபரான பாலியல் வர்த்தகத்தை செயற்படுத்திய மவுண்ட் லவனியா ஆசாமியிடம் 300,000 ரூபா வழங்கினார். 15 வயதான சிறுமியை, கன்னிப் பெண் என தொழிலதிபரிடம் அவர் வழங்கியுள்ளார்.
அதில் 150,000 ரூபாவை தான் எடுத்துக் கொண்ட பிரதான சந்தேகநபர், மீதிப்பணத்தை சிறுமிக்கு வழங்கியுள்ளதாக பொலிசாரை மேற்கோளிட்டு தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 பேர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைதான வெள்ளவத்தை ஆசாமி, சிறுமியை பாலியல் வர்த்தகத்திற்காக பல்வேறு இடங்களிற்கு அழைத்து சென்றுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட சமயத்திலும், இன்னொரு பெண்ணை பாலியல் வர்த்தகத்திற்காக ஒரு இடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
மிஹிந்தலை பிரதேசசபை உப தவிசாளர், கொழும்புக்கு சென்ற சமயத்தில், பம்பலப்பிட்டி பகுதியில் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.
ஜூன் மாதம் 8ஆம் திகதி தரகர் ஒருவர் மூலம் சிறுமியை தான் தங்கியிருந்த ஹொட்டல் அறைக்கு அழைத்து சென்று, உல்லாசமாக இருந்துள்ளார்.
சிறுமிக்கு தன்னை பிரதேசசபை உறுப்பினர் என அறிமுகப்படுத்தி உடலுறவு கொண்டதுடன், தன்னுடைய கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் பிரதி தவிசாளர் வழங்கியதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், பிரதி தவிசாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குற்றச்சாட்டுக்களை மறுத்தார். பிரதி தவிசாளர் கிட்டத்தட்ட 2 வருடங்களாக ஆண்மைக் குறைபாட்டினால் அவதிப்பட்டு வருவதாகவும், அதற்கு அவர் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
சிறுமியுடன் அறையில் இருந்தாலும், பாலியல் உறவில் ஈடுபடவில்லையென்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வழக்கை விசாரித்த நீதிவான், சிறுமி வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்ட காலம் வயதான நபர்களால் உடல், உளரீதியாக துஷ்பிரயோகத்திற்குள்ளானது வெளிப்பட்டதாகவும், அவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பது தெரிவதாகவும், மீண்டும் பாடசாலை கல்வியை தொடர ஆர்வமாக உள்ளதாகவும், உடல், உள சிகிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.