இங்கிலாந்துடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை படுதோல்வியடைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வழக்கத்தின் பிரகாரம் சொதப்பலாக ஆடி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களை பெற்றது.
தனஞ்ஜய டி சில்வா அதிகபட்சமாக 91 ஓட்டங்களை பெற்றார்.
பதிலளித்தாடிய இங்கிலாந்து 43 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றியலக்கை அடைந்தது.
இந்த தோல்வியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தோல்வியடைந்த நாடு என்ற மிக மோசமான சாதனையை இலங்கை படைத்தது.
ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த நாடாக இந்தியா இதுவரை விளங்கியது. அதனை இலங்கை முறியடித்துள்ளது.
இலங்கை இப்போது 428 போட்டிகள் தோல்வியடைந்துள்ளது. இந்தியா 427 போட்டிகளில் தோல்வியடைந்ததே இதுவரை மோசமான சாதனையாக இருந்தது. இங்கிலாந்து தொடரில் இதுவரை நடந்த ஒரு நாள் போட்டிகள் இரண்டிலும் இலங்கை தோல்வியடைந்து அந்த சாதனையை முறியடித்தது.
பாகிஸ்தான் 414 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
1975 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை இலங்கை 860 போட்டிகளில் விளையாடியதுடன் 390 போட்டிகளில் வென்று 428 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இலங்கையின் வெற்றி / இழப்பு விகித மதிப்பு 0.913 ஆகும். இதைவிட மோசமான பெறுதியை கொண்டவை பங்களாதேஷ் மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகள் மட்டுமே.
இந்த பட்டியலில் 1.77 புள்ளி மதிப்புடன் தென்னாபிரிக்கா முதலிடத்தில் உள்ளது.
2015 ஆண் ஆண்டிலிருந்து இலங்கை ஆடிய 75 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதாவது, இந்த காலகட்டத்தில் 62% ஆட்டங்களில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் வெற்றி / தோல்வி விகிதத்தை கீழே உள்ள விளக்கப்படம் காட்டுகிறது. இலங்கை கிரிக்கெட்டின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை இதன் மூலம் தெளிவாக கண்டறியலாம்.