கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கல்வித்துறைசார் உயரதிகாரிகள் மீது அவதூறு பரப்பி இல்லாத அமைப்பின் பெயரில் போலி கடிதங்கள் அனுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கல்வி கலாசார மேம்பாட்டு இணையம் என்ற இல்லாத அமைப்பின் பெயரல் கல்வி அதிகாரிகள் மீது இல்லாத குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் எழுதி
மாகாண மட்ட உயரதிகாரிகளுக்கு போலி கடிதங்கள் அனுப்பட்டுள்ளன.
மேற்படி இப் போலி அமைப்பானது கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்ற கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் பெயரை ஒத்ததாக இருப்பதன் காரணமாக பலரும் கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்திடம் தொடர்பு கொண்டு வினவியிருந்த நிலையில் அவர்கள் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையில், திட்டமிட்டு காழ்புணர்ச்சி காரணமாக இவ்வாறு அமைப்புகளின் பெயர்களில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும், இதனை தாம் வன்மையாக கண்டிப்படிதாகவும் கல்வி கலாசார அபிவிருத்தி அமையம் தெரிவித்துள்ளது.
எனவே இவ்வாறான போலி அமைப்புகள் தங்களின் சுயலாப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக திட்டமிட்டு அனுப்பப்படும் கடிதங்கள் தொடர்பில் உயரதிகாரிகளும் அவதானமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கல்வித் துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.