தமிழகத்தில் 35 வயது பெண் மீது தீராத காதல் கொண்ட 65 வயது முதியவர், காதல் கைகூடாத ஆத்திரத்தில் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கவிதா(35). இவர் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கவிதா கணவருக்கு கை உடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் அவரது வாழ்வாதாரத்திற்காக கவிதா வசிக்கும் வீட்டின் அருகே கடந்த இரண்டு மாதங்களாக காய்கறி, பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.
கவிதா விற்கும் காய்கறி, பழங்களை வாங்க தினந்தோறும் சென்னை கிண்டியை சேர்ந்த 65-வயதுடைய முருகன் என்பவர் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒன்னறை மாதமாக 65 வயதுடைய முதியவர் 35 வயதுடைய கவிதாவிற்கு காதல் வலை வீசியுள்ளார்.
கவிதா தன்னுடைய காதலுக்கு பச்சைகொடி காட்டாத நிலையில் தனது காதலை தெரிவிக்க கவிதா வீட்டிற்கே சென்றதாக கூறப்படுகிறது. இருந்தும் கவிதா முருகன் காதலை ஏற்க மறுத்ததால் தன்னால் முடிந்த பல்வேறு யுக்திகளை கையாண்ட வயதான காதல் ரோமியோவிற்கு கடைசிவரை ஏமாற்றமே மிஞ்சியதால் விரக்தியடைந்துள்ளார்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குடும்பமே முக்கியம் என கருதிய கவிதா வயதான காதல் ரோமியோ முருகனுக்கு பயந்து காய்கறி, பழக்கடை போடுவதையே இரண்டு வாரங்களாக நிறுத்தி விட்டார்.
இரண்டு வாரங்களாக கவிதாவை பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்த வயதான காதல் ரோமியோ முருகன் அவருடைய ஒருதலை காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று பார்த்தபோது கவிதா வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் கடும் விரக்தியடைந்த முருகன் ஆத்திரத்தில் கவிதா வசிக்கும் வாடகை வீட்டிற்கு தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
முருகன் தொல்லையிலிருந்து தப்பிக்க கவிதா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தது பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது.வீட்டின் உரிமையாளர் கவிதாவை தொடர்பு கொண்டு அவர் வசித்து வந்த வீடு எரிந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து சேதமாயின.
இதுகுறித்து கவிதா பொலிசில் புகாரளித்த நிலையில் பொலிசார் முருகனை கைது செய்துள்ளனர். முதியவரின் ஒரு தலை காதலால் வாடகை வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் கவிதாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.