கடந்த நல்லாட்சி காலத்தில் அரியாலையில் சீன நிறுவனம் கடலட்டை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் ஒரு பிரிவுதான் தற்போது கௌதாரிமுனையில் இயங்கி வருகிறது. அந்த பகுதி கடற்றொழிலாளர் சங்கத்துடன் கதைத்து செய்வதாகத்தான் ஒரு கதையுள்ளது. சீன நிறுவனத்துடனான உடன்படிக்கையில் கௌதாரிமுனை மீனவர்கள் கையொப்பமிட்டிருக்காவிட்டாலும், அவர்களிற்கு சீன நிறுவனம் தனிப்பட்டரீதியில் ஏதும் வழங்கியதோ தெரியவில்லையென தெரிவித்துள்ளார் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
பூநகரி, கௌதாரிமுனையில் சீன நிறுவனமொன்று சட்டவிரோதமாக கடலட்டை வளர்ப்பதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அதில் ஒரு குழப்பம் ஒன்றுள்ளது. அவை சொல்லினம் அந்த திணைக்களத்தின் அனுமதி எடுத்ததாக. செய்தியில் சொன்னதுதான் எனக்கு தெரியும். நான் இந்த கிழமை அங்கு வருவேன். நேரில் வந்து பார்த்த பின்னரே என்னால் முடிவெடுக்க முடியும்.
கடற்றொழில் அமைச்சின் நட்டா நிறுவனத்தின் அனுமதி பெற்றே வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. யாழ்ப்பாணம் அரியாலையில் கடந்த ஆட்சியில் இந்த நிறுவனம் செயற்பட தொடங்கியது. அதன் ஒரு பிரிவுதான்- கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்துடன் கதைத்து செய்வதாகத்தான் அந்த கதையுள்ளது. நான் அங்கு நேரில் வந்து பார்த்து விட்டுத்தான் என்ன செய்யலாமென்பதை யோசிக்கிறேன்.
கௌதாரிமுனை கடலட்டை பண்ணை ஒப்பந்தத்தில், கடற்றொழிலாளர் சங்கங்கள் இதுவரை ஒப்பமிடவில்லை, எனினும் பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது பற்றி கேள்வியெழுப்பப்பட்ட போது,
அந்த ஒப்பந்தத்தில் அவர்கள் ஒப்பமிடா விட்டாலும், சீன நிறுவனம் தனிப்பட்ட ரீதியில் எதுவும் வழங்கியதோ தெரியவில்லை. ஏனெனில் அவர்களின் ஒத்துழைப்பில்லாமல் அங்கு கடலட்டை பண்ணையை ஆரம்பித்திருக்க முடியாது. பக்கத்து கிராம மக்களே, இந்த பகுதி மக்களின் அனுமதியில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில், இந்த பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றால், அந்த பகுதி கடற்றொழிலாளர் சங்கத்தினதோ அல்லது அதன் ஒரு பகுதியினதோ ஏதோ ஒரு விதமான அங்கீகாரம் இருந்திருக்க வேண்டும்.
நேரில் வந்து பார்த்து விட்டுத்தான் கதைப்பது நல்லதென நினைக்கிறேன். ஊடகங்கள் சுயலாப அடிப்படையில், உள்நோக்கத்தினடிப்படையில் இதில் பல விடயங்களை வெளியிடுகிறார்கள் என்றார்.