பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பிய பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டதால் அவர் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49), சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.
இதையேற்ற தமிழக அரசு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28ஆம் திகதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்குப் பேரறிவாளன் வந்தார். வீட்டில் இருந்தபடி சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட பேரறிவாளனுக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. பரோல் காலத்தில் சிறைத்துறை உத்தரவுப்படி தினமும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட்டும் வந்தார்.
இந்நிலையில், இன்றுடன் ஒரு மாதம் பரோல் காலம் முடிந்து பேரறிவாளன் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையறிந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தன் மகனின் பரோல் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கை மனு பரிசீலினையில் இருந்தது. இன்று காலை வரை அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வராததால் பேரறிவாளனைச் சிறைக்கு அழைத்து வரும் பாதுகாப்புப் பணிகளைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தினர்.
இன்று காலை 11.45 மணிக்கு ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார். காவல் துணை கண்காணிப்பாளர்கள் பழனிச்செல்வம் (வாணியம்பாடி), வெங்கடகிருஷ்ணன் (வேலூர்) ஆகியோர் தலைமையிலான காவலர்கள் பேரறிவாளனைப் பாதுகாப்புடன் வாகனத்தில் அழைத்து வந்தனர்.
பிறகு சந்தைகோடியூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேரறிவாளனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, அங்கிருந்து 3 அடுக்குப் பாதுகாப்புடன் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்குத் திரும்பினார். பேரறிவாளன் சென்ற வாகனம் வாணியம்பாடியைக் கடந்த நிலையில், தமிழக அரசு அவரது பரோல் காலத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக உத்தரவிட்டது.
இந்தத் தகவல் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்குத் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனே, சென்னைக்குப் புறப்பட்ட வாகனம் வாணியம்பாடியில் இருந்து மீண்டும் ஜோலார்பேட்டைக்குத் திரும்பியது. பகல் 1 மணியளவில் மீண்டும் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்குப் பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.