உலக அளவில் அதிகப் பார்வையாளர்களை பெற்று, தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஆக்ஷன் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்திருந்தார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ இந்த படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்தில் கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரான இந்த படம் நீண்ட இழுப்பறிக்கு பின்பு கடந்த ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்த இப்படத்தை தனுஷ் திரையரங்கில் வெளியிடவே ஆசைப்பட்டார். ஆனால் திட்டமிட்டபடி ஓடிடியில்தான் கடைசியில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இருப்பினும் பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
முதலில் இப்படத்தை தமிழில் மட்டும் வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. அதன்பிறகு இப்படம் 16 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், பொலீஸ் போர்ச்சுகீஸ் பிரசிலியன் ஸ்பானிஷ், ஸ்பானிஷ்(நியூட்ரல்), தாய் இந்தோனேஷியன், வியட்நாமிஸ் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியானது. நெட்பிளிக்ஸ் தளம் மூலம் வெளியான இப்படத்தை 190 நாடுகளில் உள்ள ரசிகர்கள் பார்த்துள்ளனர். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் உலக அளவில் அதிகப் பார்வையாளர்களை பெற்ற படம் என்ற சாதனையை படைத்துள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.