தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதுகென்பில்லாத ஆளுமையற்ற தனம் வெளியாகியுள்ளது. கடந்த நல்லாட்சி காலத்தில் கடும் பலம் பொருந்திய சக்தியாக அந்த அரசாங்கத்தில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் விடுதலை செய்ய முடியாமல் போன தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தை ஆளுமையும் மனிதாபிமானமும் உள்ள ஜனாதிபதி கோத்தாபய அரசு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளருமான ஏ.எம். ஜாஹீர் தெரிவித்தார்.
இன்று (26) காலை மாளிகைக்காட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சிங்கள மக்களின் புனித நாள்களில் ஒன்றான பொசன் பண்டிகையை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் அரசியல் கைதிகளாக நீண்டகாலங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 அரசியல் கைதிகளை தமிழ் மக்களின் நீண்டநாள் போராட்டங்களை மதித்து விடுதலை செய்த ஜனாதிபதி கோத்தாபய அரசுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உட்பட அரசின் முக்கிய தலைவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மிக நீண்டகால போராட்டங்களை முன்னெடுத்த தமிழ் மக்களின் குரலுக்கு தீர்வு கிட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. இதை போன்று அரசியல் கைதிகளாக சிறையில் நீண்டகாலமாக தடுப்பில் உள்ள ஏனையவர்களும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் முஸ்லிம் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த நல்லாட்சி காலத்தில் கடும் பலம் பொருந்திய சக்தியாக இருந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளினால் மக்களின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்பட வில்லை. ஆனால் இப்போதைய அரசாங்கத்தினால் ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 1லட்சம் கிலோ மீட்டர் வீதி அபிவிருத்தி, ஒரு லட்சம் வறுமை ஒழிப்பை மையமாக கொண்ட செயலணி வேலைவாய்ப்புக்கள், பட்டதாரி நியமனங்கள், கொரோனா உதவித்தொகை என பல்வேறு மக்கள் னால திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த அரசாங்கங்கள் செய்யாதவற்றை இவர்கள் செய்யும் போது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் வைக்கோல் பட்டறை விலங்கை போன்று நடந்து கொள்கிறார்கள். அதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியே சிந்திக்கிறார்கள். நாங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த அரசு சிறப்பாக தொழிற்படுகிறது. அரசின் அபிவிருத்தி திட்டங்களில் அப்போது எதிர்த்தோர்கள் இப்போது உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.