குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பயணிகளுக்கு கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என இண்டிகோ விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி வழங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் இதுபோன்ற தள்ளுபடியை வழங்கும் முதல் விமான நிறுவனம் இதுதான். இதன்மூலம் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மட்டுமல்லாமல், இண்டிகோவில் செல்பவர்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
மறைமுகமாக பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியும் என இண்டிகோ தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். தவிர, இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும், முன்பதிவின்போது மத்திய அரசு வழங்கியுள்ள தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.
இதுதவிர விமான நிலையத்துக்குள் செல்லும்பொது தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது. குறைந்த இருக்கைகளே இருப்பதால், இருக்கைகளின் தேவையை பொறுத்தே தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல, இதர சலுகைகளுடன் இந்தச் சலுகையை இணைக்க முடியாது என்றும் இண்டிகோ தெரிவித்திருக்கிறது.
இந்தச் சலுகை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது அறிவிக்கப்பட்டிருந்தாலும், எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பதை இண்டிகோ அறிவிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் இதுபோன்ற சலுகையை வழங்கிவருகின்றன. அதேபோல இந்தியாவில் சில உணவகங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சலுகை வழங்குகிறது.