“தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட இதர நலன்புரி விடயங்களை தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தத்தை மீள புதுப்பிப்பதற்கு 5 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். ஏனைய நிறுவனங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. எனவே, கூட்டு ஒப்பந்தத்தை மீள கைச்சாத்திடுவதே சாலச்சிறந்ததாக அமையும்.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் இன்று (24) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“கொரோனா பரவல் மற்றும் மரணம் தொடர்பில் உரிய தரவுகள், உரியவகையில் வழங்கப்படாததாலேயே பயணத்தடையை நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதிக்கு தவறான தகவலை வழங்கியது இராணுவமா, சுகாதார பிரிவா என்பது தெரியாது. ஆனால் உண்மையான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
அதேபோல இரசாயன உரம் குறித்தும் ஜனாதிபதிக்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து அவர் தீர்மானம் எடுத்துள்ளதால் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. எனவே, உண்மை நிலைவரத்தை தேடி அறிந்து ஜனாதிபதி சிறந்த முடிவை எடுக்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதில் நல்ல நோக்கம் இருந்தது. தற்போது இந்த அரசில் 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதன் பின்னணியில் அரசியல் உள்ளது. நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் அறிவிப்பு விடுத்து இரு நாட்களில் விடுதலை இடம்பெறுகின்றது. தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையில் அவர்களை விடுத்திருந்தால் வரவேற்போம்.
நாட்டில் தொழிலாளர்களுக்கென சட்டம் உள்ளது. சர்வதேச சமவாயங்களும் உள்ளன. எனினும், ஆயிரம் ரூபா சம்பள உயர்வின் பின்னர் தோட்ட நிர்வாகங்களும், முகாமையாளர்களும் தன்னிச்சையாக, சர்வாதிகாரிபோல் செயற்படுகின்றனர். 20 கிலோ கொழுந்து பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் காட்டுச்சட்டத்துக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கலந்துரையாடினேன். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட 5 நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று குறிப்பிட்டார். ஏனைய நிறுவனங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. எது எவ்வாறு அமைந்தாலும் தொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்துக்குமிடையில் ஒப்பந்தமொன்று இருப்பதே சிறப்பு.” என்றார்.
–க.கிஷாந்தன்-