தஞ்சையில் மன்னர்கள் கால ஆட்சியில் கட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான தூக்குமேடையை ஆக்கிரமிக்க முயற்சி நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தூக்குமேடை, இன்றைக்கும் தஞ்சாவூரில் வரலாற்று சின்னமாக வீற்றிருக்கிறது. இதனை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ இதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் தஞ்சை மக்கள் கடந்த 200 ஆண்டுகளாக இதனை பாதுகாத்து வருகிறார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன்பு, தஞ்சாவூரை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். அப்போது, தஞ்சாவூர் பெரிய கோயில் பின்புறம் சேவப்பநாயக்கன் ஏரியின் மேல் கரையில் 20 தூக்கு மேடை கட்டப்பட்டுள்ளது. தரையிலிருந்து 10 அடி உயரத்தில் செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் கலவையால் 200 அடி நீளத்திலும் 30 அடி அகலத்திலும் இந்த தூக்குமேடை கட்டப்பட்டுள்ளது. காலப்போக்கில் சேவப்பன் நாயக்கன் ஏரி குடியிருப்பு பகுதியாக மாறிப்போனது. இங்கு அமைந்துள்ள தூக்குமேடை கடந்த காலங்களில் பல முறை ஆக்கிரப்பு முயற்சிக்கு உள்ளானபோது, இப்பகுதி மக்கள் அதனை தடுத்து நிறுத்தி பாதுகாத்து வந்துள்ளார்கள்.
முறையான பராமரிப்பு இல்லாமல், மேற்கூரை சிதிலமடைந்ததால், தற்போது வெறும் கட்டடம் மட்டும் எஞ்சியுள்ளது. இந்த தூக்குமேடை கட்டுமானத்தை நேற்று சிலர் இடிக்க வந்தார்கள். இதையடுத்து அங்கு திரண்டு வந்த இப்பகுதி மக்கள், தூக்குமேடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, இடிக்கும் பணிக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பினர். இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தஞ்சை பெரிய கோயில் மீட்புக்குழு நிர்வாகி பழ.ராசேந்திரன், ‘’மராட்டிய மன்னர் காலத்தில் கொடுமையான குற்றங்களை செய்தவர்களை தூக்கு மேடையில் ஏற்றி கொல்வது அப்போதைய வழக்கமாக இருந்துள்ளது. தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்கள் இந்த தூக்குமேடையை பயன்படுத்தியுள்ளனர்.
காலப்போக்கில் தூக்குமேடை பயன்படுத்தாமல் இருந்ததால், தற்போது கட்டுமானம் மட்டும் எஞ்சியுள்ளது. இந்த தூக்குமேடையை யாரும் ஆக்கிரமிக்காதவாறு அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று திடீரென சிலர் அங்கு வந்து இந்த இடம் எங்களுக்கு உரியது எனக்கூறி, அதை இடித்து அகற்ற முயற்சி செய்தனர். இதை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். மேலும், இந்த இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, எஞ்சியுள்ள கட்டுமானத்தை பாதுகாக்க வேண்டும். இதில் தஞ்சை மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.