தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இதையடுத்து இவர் தயாரித்த படம் ‘நாங்க ரொம்ப பிஸி’. சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி இப்படத்தை இயக்கினார். இவர் ஏற்கனவே வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
இந்நிலையில், சுந்தர் சி அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தையும் பத்ரி தான் இயக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சுந்தர் சி, ஜெய் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கலகலப்பு 2 படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.