கார்த்திக்கின் கிழக்கு முகம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ரேஷ்மா. பூமணி, மறவாதே கண்மணியே, நீ எந்தன் வானம், வடுகப்பட்டி மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
வடுகப்பட்டி மாப்பிள்ளை படத்தில் ஹம்சவர்தனுக்கு ஜோடியாக நடித்தார் ரேஷ்மா. மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் மகன் தான் ஹம்சவர்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ரேஷ்மாவும், ஹம்சவர்தனும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் இருக்கிறார். சாந்தி என்று அழைக்கப்பட்ட ரேஷ்மாவுக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்த பிறகும் கூட மூச்சு விட சிரமப்பட்டிருக்கிறார். இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரேஷ்மாவுக்கு வயது 42.
அவரின் உடல் தேனாம்பேட்டையில் இருக்கும் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரின் உடல் இன்று மதியம் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவிருக்கிறது.
ரேஷ்மாவின் மரண செய்தி அறிந்த பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.