யூரோ கால்பந்து தொடரில் போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றத் தவறிய ஸ்பெயின் அணி போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடித்தது.
யூரோ கால்பந்து தொடரில் ஸ்பெயினின் செவில்லே நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் உள்ள ஸ்பெயின் – போலந்து அணிகள் மோதின.
25வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிமுதல் கோலை அடித்தது. பொக்ஸ் பகுதியின் ஓரத்தில் இருந்து ஜெரார்ட் மோரேனோ அடித்த பந்தை கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக நின்றஅல்வாரோ மொராட்டா கோலாக மாற்றினார். ஆனால் இது முதலில் ஓஃப் சைட் கோல் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஸ்பெயின் அணி மேல்முறையீடு செய்ய கோல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலந்து அணி இரு முறை கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. 54வது நிமிடத்தில் போலந்து அணி பதிலடி கொடுத்தது. கோர்னரில் இருந்து கமில் ஜோஸ்வியாக் அடித்த குரஸை ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி தலையால் முட்டி கோலாக மாற்றினார்.
இதனால் ஆட்டம்1-1 என்ற சமநிலையை எட்டியது.
55வது நிமிடத்தில் ஜெரார்ட் மோரேனோவை பொக்ஸ் பகுதிக்குள் விதிமுறைகளை மீறி போலந்து வீரர் ஜாகுப் மோடர், முரட்டுத்தனமாக தடுத்தார்.
இதனால் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் இதை ஸ்பெயின் அணி வீணடித்தது. ஜெரார்ட் மோரேனோ இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்தின் தூண் மீது பட்டு ஏமாற்றம் அளித்தது. எனினும் திரும்பி வந்த பந்தை அல்வாரோ மொராட்டா இலக்கை நோக்கி செலுத்தினார். ஆனால் பந்து விலகிச் சென்றது. இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிவடைந்தது.
ஸ்பெயின் அணி தனது முதல் ஆட்டத்தை சுவீடனுக்கு எதிராக கோல்களின்றி சமனிலையில் முடித்திருந்தது. இதன் மூலம் தனது பிரிவில் 2 புள்ளிகளுடன் 3வது இடம் வகிக்கிறது ஸ்பெயின் அணி.
நொக்அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் ஸ்பெயின்அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சுலோவேக்கியாவை வீழ்த்தியாக வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இன்றைய ஆட்டங்கள்
வட மாசிடோனியோ – நெதர்லாந்து
நேரம்: இரவு 9.30
உக்ரைன் – ஒஸ்திரியா
நேரம்: இரவு 9.30
ரஷ்யா – டென்மார்க்
நேரம்: நள்ளிரவு 12.30
நேரலை: சொனி சிக்ஸ்