நடிகர் சந்தானம் ‘மேயாத மான்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சந்தானம் நடித்துள்ள சில படங்கள் லொக்டவுன் காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது மேலும் பல படங்களில் நடிக்கவும் சந்தானம் கமிட்டாகியுள்ளார்.
தற்போதைய அப்டேட் என்னவென்றால், சந்தானம் மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரத்னகுமார் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து அமலா பால் நடிப்பில் ‘ஆடை’ என்னும் படத்தை இயக்கினார். அந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியது குறிப்பிடத்தக்கது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் திரைக்கதையிலும் ரத்னகுமார் பணியாற்றியுள்ளார்.
தற்போது ரத்னகுமார், சந்தானம் நடிப்பில் தனது அடுத்த படத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இறுதிகட்ட பேச்சுவார்த்தை முடிந்தவுடன் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வழக்கமான சந்தானம் படங்கள் போல ரொமான்டிக் காமெடி படமாக உருவாக்கவுள்ளது.
இதற்கிடையில் சந்தானம் டிக்கிலோனா, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் நடித்து வந்த ‘சபாபதி’ படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.