கொவிட் அல்லாத மரணங்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதால், இறுதிக் கிரியைகளை நடத்துவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை பலரும் முன்வைத்தனர். இதன் மூலம், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார மற்றும் ஏனைய கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, கொவிட் காரணமாகவன்றி மரணிக்கின்றவர்களின் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
நேற்று (18) கொவிட்- 15 செயலணியுடனான கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.
நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ஜூன் மாதம் 14ஆம் திகதி அன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ஜூன் மாதம் 11ஆம் திகதி அன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், ஜூன் 21 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர், குறித்த மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் குறித்து, ஜனாதிபதி விரிவாக விளக்கினார்.
இதன்போது, சில மரணங்கள் பெப்ரவரி 06 முதல் ஜூன் 11ஆம் திகதி வரையான 04 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. சில மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 11ஆம் திகதி இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதனால், தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது, சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜூலை மாதமளவில், குறைந்தபட்சம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளன என்றும் அதன்படி, விரைவில் அதிகளவில் தடுப்பூசிகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும், அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.