மட்டக்களப்பு- பொலநறுவை எல்லலையில் அமைந்துள்ள விலால் ஓடை எனும் இடத்தில் மாதுறு ஓயாவிலிருந்து வரும் நீர் வீணாக செல்லாதவாறு மண் மூடைகள் கொண்டு அணைக்கட்டு கட்டும் நடவடிக்கைகளை விவசாயிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய கொரோனா தொற்றின் அச்ச நிலமையுடன் வாகநேரி திட்டத்திற்கான விவசாய அமைப்புக்கள் பல ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக தங்களது விவசாய செய்கையை பாதுகாக்கும் வகையில் கடந்த ஒரு வார காலமாக இவ் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இடம்பெறும் வெள்ளம் காரணமாக அடிக்கடி இவ் அணைக்கட்டானது உடைப்பெடுப்பதனால் நீரானது வயல் நிலங்களுக்கு செல்லாது வீணாக பயனற்ற வாகையில் ஆறு,கடல்,ஓடைகள்,போன்ற வேறு இடங்களுக்கு வழிந்தோடி செல்வதனால் விவசாய நிலங்கள் நீரின்றி வரண்டு போகின்றன.
இதனால் விவசாய செய்கையில் பாதிப்பு ஏற்படுவதாகவும் இதனை தவிர்க்கும் பொருட்டு பிரதேச விவசாயிகள் இவ் அணைக்கட்டினை தங்களது சொந்த பணத்தினை முதலிட்டு அணைக்கட்டு கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாதுறு ஓயா நீரானது வாகநேரி குளத்திற்கு சென்றடைய திறந்து விடப்படும்போது மேற்குறித்த விலால் ஓடை எனும் இடத்திலே கரையுடைத்து பாய்வது வழக்கம்.
இவ் அணைக்கட்டினை கட்டுவதற்காக சுமார் 10 ஆயிரம் மண்முடைகளை கொண்டு நூற்றுக் கனக்கான விவசாயிகளின் பங்களிப்புடன் 10 நாட்களாக அணைக்கட்டு கட்டும் நடவடிக்கைகள் இரவு பகலாக இடம்பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் வருடத்தில் அடிக்கடி இடம்பெறுவதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். விலால் ஓடை உடைப்பெடுப்பதும் அதனை மண் மூடை கொண்டு கட்டுவதும் தொடர் கதையாகவே உள்ளது.
இதனை இவ்வாறு கட்டுவதன் மூலம்தான் நீரானது தடங்களின்றி வாகநேரி குளத்தினை சென்றடைய வாய்ப்புள்ளது.
இவ் நீரோட்டமானது வாகநேரி குளத்தினை சென்றடையும் வழியில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாய கிராமங்களான நாமல் கம, குருளுவத்த, அசலபுர, புணானை,க டவத்தமடு போன்ற இடங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் மேற்கொண்டுள்ள சிங்கள,தமிழ் முஸ்லிம் விவசாயிகள் நன்மை அடைகின்றனர்.
அதேபோன்று வாகநேரி குளத்து நீரினை கொண்டு வாழைச்சேனை காகித ஆலையின் தேவைப்பாடுகளுடன் மேலும் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெள்ளம் காரணமாக உடைப்பெடுக்கப்பட்ட விலால் ஓடையானது படிப்படியாக விசாலமடைந்து உருவெடுத்ததுடன் பல சிறிய ஓடைகளை புதிதாக உருவாக்கியுள்ளது.
இதனால் வாகநேரி நீர்பாசன விவசாயத்திட்டம் மற்றும் ஏனைய பிரதேச விவசாய செய்கையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விவசாய அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையினால் கமத்தொழில் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசன மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் அவர்களிடம் குறித்த அமைச்சின் இராஜங்க அமைச்சராகவிருந்த எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்டைப்படையில் அணைக்கட்டு கட்டுவதற்கான முயற்சி முன்னெடுக்கும் முகமாக அடிக்கல் நடப்பட்டது.
இருந்தபோதிலும் நல்லாட்சி அரசாங்கம் தேர்தலில் தோல்வியடைந்ததினால் இத் திட்டம் கைவிடப்பட்டது.இன்று வரை அதனை கட்டுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே இத்திட்டத்தினை முன்னெடுக்க தற்போது மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொதுஜனபெரமுன அரசினை பிரதிநிதித்துவப் படுத்தும் இராஜங்க அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற அரசியல் பிரமுகர்கள் முன்வர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.