கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல என சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் .
நேற்று நண்பகல் வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தவராசா கலையரசன் , சிவஞானம் சிறீதரன் , காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் ஆகியோர் செயலக விடையம் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் இந்த கருத்தினை தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,
கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்திற்குரிய கணக்காளரை நியமிக்காமை மற்றும் காணிகள் அதிகாரமற்ற நிலையில் அந்தப் பிரதேசம் இயங்குகின்ற விடயங்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டிக் கொண்டு அங்கிருந்தவர்களுடன் உரையாடி பிரதேச செயலகத்தினையும பார்வையிட்டுள்ளோம்.
இந்தப் பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 30 வருடங்களைத் தாண்டியும் பிரதேச செயலகத்தினுடைய நடவடிக்கைகள் நடைபெறுகின்ற போதும் ஒரு கணக்காளரை நியமிக்காமல், நியமித்தும் அதனை நிறுத்தியும் நடவடிக்கைகளை அரசங்கம் மேற்கொண்டிருப்பது ஒரு நல்ல செயலல்ல.
அதேபோல் தன்னுடைய பிரதேச செயலக எல்லைக்குள் காணி அதிகாரமானதும் அப்பிரதேச செயலகத்திற்கு வழங்கப்படாமல் இருக்கின்றதே தவிர மற்றைய அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நாங்கள் தொடர்ந்து இந்தப் பிரதேச செயலகத்தற்குரிய காணி நிதி அதிகாரங்களை உரிய தரப்புகளோடு பேசி மிக விரைவாக அவற்றை இப்பிரதேச செயலகத்திற்குப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதனை இன்னும் மிக வேகப்படுத்தி செயற்படுத்துவோம் என தெரிவித்தார்.