பிரபல நடிகையான கவிதாவின் மகன் சாய் ரூப் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மெல்ல மெல்லமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ் அரசும் முழு ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அண்மையில் அறிவித்தது. கொரோனா இரண்டாம் அலைக்கு பெரும்பாலான திரைத்துறை பிரபலங்களும் தப்பவில்லை. இந்நிலையில் பிரபல நடிகையான கவிதா கொரோனா பெருந்தொற்றுக்கு தனது மகனை பறிகொடுத்து சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 1976 ஆம் ஆண்டு வெளியான ஓ மஞ்சு என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமான கவிதா, அதே ஆண்தில் தெலுங்கிலும் ஸ்ரீஸ்ரீ முவ்வா என்ற படத்தின் மூலம் கால் பதித்தார்.
தமிழில் கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் கவிதா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஆட்டுக்கார அலமேலு, நாடோடித் தென்றல், அமராவதி உள்ளிட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் தெலுங்குத் திரையுலகில் பிரபலமானவர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இன்னொருபுறம் ஆந்திர அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
கடந்தாண்டு கொரோனா முதல் அலை தொடங்கிய போதே ஷூட்டிங் மற்றும் அரசியல் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்து வந்தார் கவிதா. அண்மையில் இவரது கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் சிகிச்சைப் பலனின்றி கவிதாவின் மகன் சாய் ரூப் மரணமடைந்துள்ளார்.
கவிதாவின் கணவர் தசரத ராஜ் தற்போதும்தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு மகனை பறிக்கொடுத்த நடிகை கவிதாவுக்கு தெலுங்கு, தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.