கிளிநொச்சி பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினரினால் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 9 ஆடுகள் திருடியமை தொடர்பிலும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த திருட்டு சம்பவத்தில் திருடப்பட்ட 9 ஆடுகள் மற்றும் வெவ்வேறு திருட்டு பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்த செல்லப்பட்டுள்ளது.
குறித்த 9 ஆடுகளும் பன்னங்கண்டி, பெரிய பரந்தன், செல்வாநகர், ஜெயந்திநகர், திருநகர் ஆகிய பகுதிகளில் திருடப்பட்டதாக சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
எனினும் குறித்த பகுதிகளிலிருந்து ஆடு திருடப்பட்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கவில்லை எனவும், குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் உரிமையாளர்கள் ஆட்டினை அடையாளப்படுத்தும் வகையில் முறைப்பாட்டினை பொதுமக்கள் முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறும், திருட்டு சம்பவங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றின் ஊடாக தெரியப்படுத்தும் சந்தர்ப்பத்திலேயே விசாரணைகளிற்கு உதவியாக அமையும் எனவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
அண்மை காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நடபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவினால் மீட்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.