தமிழ் சினிமாவில் அரசியல் நையாண்டிப் படங்களை எடுத்து இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர் மணிவண்ணன். ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், ‘24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’ போன்ற க்ரைம் த்ரில்லரில் ஏராளமான வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
சத்யராஜ் நடிப்பில் ‘அமைதிப்படை’ என்ற அரசியல் திரைப்படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். இந்த படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு நெருங்கிய நண்பர்களாக மாறிய மணிவண்ணனும் சத்யராஜும் இணைந்த படங்களில் அரசியல், மூடநம்பிக்கை, பெண் அடிமைத்தனம் என சமகால பிரச்சினைகளை தோலுரித்துக் காட்டினர். ஏராளமான படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த மணிவண்ணன், மாரடைப்பு காரணமாக கடந்த 2013ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மணிவண்ணனின் நெருங்கிய நண்பனான சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 365 நாளும் என் தலைவனின் நினைவுநாள் தான். மணிவண்ணன் இல்லையென்றால் இந்த சத்யராஜ் இல்லை. இந்த சத்யராஜ் பாணி என்கிறார்களே, அதுவே மணிவண்ணன் பாணிதான். நான் மட்டும் அல்ல. தமிழ் சினிமாவே அவரை பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு சின்ன உதாரணம். சமீபத்தில் வந்த ‘மாஸ்டர்’ படத்தில் தம்பி விஜய் ஒரு காட்சியில் சொல்லியிருப்பாரு. பெரிய அமைதிப்படை அமாவாசை என்று நினைப்பா என வசனம் பேசியிருப்பாரு.
அதேபோன்று விரைவில் ரிலீசாக உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் கூட தனுஷ் பேசிய வசனத்தில் சோழ பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என்று கூறியிருக்கிறார். இப்படி எல்லாரும் எனது நண்பனை ஞாபம் வைத்திருப்பதற்கு நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் ‘அமைதிப்படை’ படத்தின் நினைவுகளை பகிர்ந்த அவர், சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ என்ற வசனத்தையும் பேசியிருக்கிறார். மீண்டும் வில்லனாக நடிக்க ஆசை என்றும், அதை மீண்டும் இயக்க மணிவண்ணன் தேவை என்று கூறினார். இவ்வளவு சீக்கிரமாக அவர் இறந்திருக்கக்கூடாது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.