சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்திற்காக இலங்கையில் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் ஊடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கவுள்ளதுடன், இதற்கான இரு தரப்பு கடன் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இக்கடன் ஒப்பந்தம், இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவினதும் முன்னிலையில், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகலவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.