தனது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த யுவதியை, குடும்பத்தினரே ஆணவக் கொலை செய்து விட்டு தலைமறைவான அதிர்ச்சி சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளி சமன் அப்பாஸ் (18) என்ற யுவதியே கொல்லப்பட்டுள்ளார்.
யுவதியை கொலையை செய்தவர்கள் என்று நம்பப்படும் பெண்ணின் மாமனும் மச்சானும் ஐரோப்பாவில் ஏதாவது ஒரு நாட்டுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. யுவதியின் சடலமும் இதுவரை மீட்கப்படவில்லை.
இந்த குற்றத்தில் அவரது பெற்றோர்களான ஷப்பார் அப்பாஸ், 46, மற்றும் நாசியா ஷாஹீன், 47, மற்றும் அவரது உறவினர்களான இஜாஸ் இக்ரம், 28, மற்றும் நோமானுல்ஹாக் நோமனுல்ஹாக், 33 ஆகியோர் அடங்கிய குடும்பத்தின் மற்ற நான்கு உறுப்பினர்கள் விசாரணையில் உள்ளனர்.
இத்தாலியின் நோவெல்லாரா பகுதியில் வசித்த, பாகிஸ்தானை பூர்வீகமாகக்கொண்ட 18 வயதுடைய சமன் அபாஸ் என்ற பெண் இத்தாலியிலுள்ள இளைஞனை காதலித்திருக்கிறார். ஆனால், அவரது குடும்பத்தினர் மகளை பாகிஸ்தானில் நிச்சயம் செய்து திருமணம் செய்துகொடுக்கவேண்டும் என்று விரும்பினார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு சமன் அபாஸ் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ரெஜியோ எமிலியா, வீட்டை விட்டு விரட்டப்பட்ட சமன், பல இரவுகள் வீதியிலேயே துஸங்கினார் என்பதற்கான தகவல்களுள்ளதாக தெரிவித்தார்.
சமூக சேவைகள் துறை, யுவதியை அவதானித்து தமது பராமரிப்பில் எடுத்துள்ளது. அத்துடன், யுவதியை வீட்டுக்கு செல்ல வேண்டாம், ஆபத்துள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
எனினும், கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி தனது சில ஆவணங்களை எடுப்பதற்காக வீட்டுக்குச் சென்றிருக்கிறார். எனினும், அவரை வீட்டை விட்டு வெளியேற குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை.
சமன் வீட்டுக்கு வந்ததை அறிந்துகொண்ட சமனின் மாமன் டனிஷ் ஹஸ்னைன், அவரது குடும்பத்தினரும் வந்து, சமனை என்ன செய்வது என்று பெற்றோருடன் கூடிப்பேசியிருக்கிறார்கள். பாகிஸ்தான் முறைப்படி கீழ்ப்படியாத பெண்ணை கொலை செய்வதுதான் வழி என்று மாமன் கலந்தாலோசித்ததை தான் ஒற்றுக்கேட்டதாகவும் தன்னை கொலை செய்வதற்கு திட்டமிடுகிறார்கள் என்றும் சமன் தனது காதலனுக்கு கூறியுள்ளார்.
“பயப்படவேண்டாம்” என்று காதலன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆனால், தன்னிடமிருந்து இரண்டு நாட்கள் எந்த தொடர்பும் கிடைக்காவிட்டால் பொலீஸிடம் தகவல் கூறும்படி காதலனிடம் சமன் தெரிவித்திருக்கிறார்.
பொலீஸார் தற்போது மேற்கொண்ட விசாரணைகளில் மீட்கப்பட்டுள்ள CCTV கமரா காணொலியின்படி –
ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் சமனின் தந்தைக்கு சொந்தமான தோட்டத்திற்கு பின்பகுதியால், சமனின் மச்சானும் இன்னும் மூவரும் உள்ளே போயிருக்கிறார்கள்.
மே மாதம் முதலாம் திகதி நள்ளிரவு வேளையில், சமனின் தந்தையும் தாயாரும் சமனை தோட்டத்துக்கு அழைத்து செல்வதும், 13 நிமிடங்களின் பின்னர், அவர்கள் மாத்திரம் தோட்டத்திலிருந்து வெளியேறுவதும் காணொலியில் பதிவாகியுள்ளது.
சமனிடமிருந்து இரண்டு நாட்களாக தொடர்பு எதுவும் கிடைக்காத, அவரது காதலன் பொலீஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். மே மாதம் ஐந்தாம் திகதி, இத்தாலி பொலீஸ் சமனின் பெற்றோரது தோட்டத்து வீட்டுக்கு தொடர்புகொண்டுள்ளார்கள். தொலைபேசியில் பதிலளித்த சமனின் மாமன், சமனின் பெற்றோர் பாகிஸ்தான் சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார். சந்தேகமடைந்த பொலீஸார் நேரில் சென்றிருக்கிறார்கள். அங்கு வீட்டில் யாருமிருக்கவில்லை.
இதன்பின்னர், மே மாதம் 9 ஆம் திகதி சமனின் மாமனாரும் சமனின் 16 வயது இளைய சகோதரரும் பிரான்ஸ் எல்லையில் பிரான்ஸ் பொலீஸாரினால் பிடிக்கப்பட்டார்கள். இருவரையும் விசாரித்துவிட்டு, சமனின் மாமனாரை விடுதலை செய்த பிரான்ஸ் பொலீஸார், அடையாள ஆவணங்கள் எதுவுமில்லாமல் வந்த காரணத்துக்காக சமனின் தம்பியை விசாரிப்பதற்கு தடுத்துவைத்திருக்கிறார்கள்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தாயும் தகப்பனும் அக்காவை கொலை செய்வதற்காக மாமனிடமும் மச்சானிடமும் கொண்டுபோய் ஒப்படைத்ததாகவும், ஆனால் பின்னர் மனம் மாறி, அவரை திரும்ப அழைத்து வரும்படி கூறியதாகவும், ஆனால் அவர்கள் அக்காவின் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு, தோட்டத்தில் புதைத்திருக்கிறார்கள் என்றும் பொலீஸாரிடம் சொல்லியிருக்கிறான்.
உடனடியாக இத்தாலி பொலீஸாரிடம் விடயத்தை எடுத்துச்சென்றபோதும், கிடைத்த இடைவெளியில் சமனின் மாமனார் ஐரோப்பாவில் எங்கேயோ தலைமறைவாகிவிட்டார். அவரது மகனும் – அதாவது சமனின் மச்சானும் – ஐரோப்பாவில்தான் எங்கேயோ கணாமல்போயிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கொலை இடம்பெற்றதாக கருதப்படும் அன்றிரவு, சமனின் மாமனாரின் கைத்தொலைபேசியிலிருந்து “காரியம் கச்சிதமாக முடிந்தது” – என்று குறுந்தகவல் அனுப்பப்பட்ட நபரை, ஜூன் ஆறாம் திகதி பிரான்ஸில்வைத்து பொலீஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, அவிழ்ந்த பல தகவல்கள் கொலை தொடர்பான முழுமையான பல விடயங்களை பொலீஸாருக்கு வெளிச்சமாக்கியிருக்கிறது.
ஆனால், சமனின் சடலத்தை மாத்திரம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. தொடர்ச்சியான தேடுதல் நடைபெறுகிறது.
இதற்கிடையில், மகளை கருணைக்கொலை செய்ததாக வெளிவரும் குற்றச்சாட்டினை பாகிஸ்தானிலுள்ள சமனின் தாயும் தகப்பனும் ஊடகங்களில் மறுத்திருக்கிறார்கள். சமன் பெல்ஜியத்திற்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். இருப்பினும், சட்டத்தரணி இசபெல்லா சிசி, இதை மறுத்துள்ளார். அவர் பெல்ஜியத்திற்கு செல்லவில்லையென்பது உறுதியென்றும், அவர் கொல்லப்பட்டு விட்டார். சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் விரைவில் சடலம் மீட்கப்படும் என்றும் தெரிவித்தார்.