நியூசிலாந்தில் பிரசவத்தின்போது தனது மனைவியையும், பிரசவித்த குழந்தையை நான்கு நாட்களுக்குப் பின்னரும் பறிகொடுத்த இலங்கையர் ஒருவர், இந்த மரணங்கள் குறித்த விசாரணையை கோரியுள்ளார்.
சரித மீபேகம, அவரது மனைவி நிலாக்ஷனி சில்வா (நிஷி) கடந்த சனிக்கிழமை காலை நோயாளர் காவு வண்டியில் அவசர சிக்சைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக கூறினார்.
நோயாளர் காவு வண்டியில் பிரசவித்த குழந்தை எலியானா, ஒக்லாந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த தொடர்ந்து, நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தையின் உயிர்காப்பு கருவிகளை நிறுத்தும் முடிவை தந்தை எடுத்தார். தாயும், மகளும் நேற்று ஒன்றாக நியூசிலாந்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.
“எனக்கு சில பதில்கள் வேண்டும்,” மீபேகம கூறினார்.
“என்ன செய்வது அல்லது எப்படி முன்னேறுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனது முழு வாழ்க்கையும் அப்படியே அழிக்கப்பட்டுவிட்டது.” என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை. மறுநாள் தம்பதியினர் ஒக்லாந்து மருத்துவமனையில் தங்கள் குழந்தையின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, குழந்தை எப்படி இருப்பாள், அவள் என்னவாக வளருவாள் என்று பேசினர். அந்த தம்பதியின் முதல் பிரவசம் அது. தங்கள் சிறிய குடும்பத்தை பற்றிய கனவில் இருந்தனர்.
“நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம், நாங்கள் ஒரு கட்டில், ஒரு குழந்தை தள்ளுவண்டி, குழந்தை உடைகள் – எல்லா நல்ல தரமான பொருட்களையும் வாங்கினோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம், அதுதான் நாங்கள் கடைசியாக நடத்திய உரையாடல்.”
பிரார்த்தனை கேட்ட பிறகு, தம்பதியினர் இரவு 10.30 மணிக்கு படுக்கைக்குச் சென்றனர்.
ஒரு மணி நேரம் கழித்து மீபேகம தனது மனைவிஇமூச்சு விட சிரமப்படுவதைக் கேட்டார்.
“நான் சில சத்தங்களைக் கேட்டேன் – அவளுக்கு வலி இருந்தது, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது, அதனால் நான் 111 க்கு போன் செய்தேன். சென் ஜோன் ஆம்புலன்ஸ் நள்ளிரவுக்குப் பிறகு வந்து நிஷியை தரையில் வைத்து அவள் சுவாசத்திற்கு உதவ முயன்றனர்.”
நிலாக்ஷனி சில்வாவின் மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் கூறினார்.
நிலாக்ஷனியின் உடல்நிலை விரைவாக மோசமடைந்தது, எனவே நோயாளர் காவு வண்டியின் மூலம் துணை மருத்துவர்கள் விரைவாக ஒக்லாந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நோயாளர் காவு வண்டியிலேயே குழந்தை பிரசவிக்கப்பட்டது.
“நிஷி இரத்த உறைவால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் என்னிடம் சொன்னார்கள். எனக்கு அது புரியவில்லை, நிஷி உடல்நலம் மற்றும் ஆரோக்கியமாக இருந்தாள், கர்ப்ப காலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. நோயாளர் காவு வண்டியில் அவர்கள் இதயம் வேலை செய்வதாகக் கூறினர், பின்னர் அது நின்றுவிட்டது, அதனால்தான் அவர்களுக்கு குழந்தையை அங்கு பிரசவிக்க வேண்டியிருந்தது.
நிஷி இறந்தபோது நான் அவளுடன் இல்லை என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது, என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.”
மவுண்ட் வெலிங்டனில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சென் ஜோன் ஒக்லாந்து மாவட்ட செயல்பாட்டு மேலாளர் க்ளென் மெட்காஃப் தெரிவிக்கையில், சனிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு ஊழியர்களுக்கு 111 அழைப்பு வந்தது . இரண்டு நோயாளர் காவு வண்டியுடன் அங்கு சென்று, ஆபத்தான நிலையில் நோயாளிக்கு குழுவினர் சிகிச்சை அளித்து ஆக்லாந்து நகர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நோயாளியின் தனியுரிமை காரணமாக, நோயாளிகளுக்கு வழங்கப்படும் கவனிப்பின் விவரம் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது.” என்றார்.
நிலாக்ஷனி சில்வா சனிக்கிழமை அதிகாலை 4.58 மணியளவில் மவுண்ட் வெலிங்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து நோயாளர் காவு வண்டியில் சென்ற போது இறந்ததை மரண விசாரணை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
38 வாரங்களில் குழந்தையை சத்திரசிகிச்சை மூலம் பெற்றெடுக்க நிலாஷினி கோரினார். ஆனால் மருத்துவச்சி அதை மறுத்து விட்டார். இல்லாம் சாதாரணமாக இருப்பதால் இயற்கையான பிரசவம் மேற்கொள்ளலாமென்றார். நிலாஷனியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், குழந்தையும் தாயாரும் இப்போது உயிருடன் இருப்பார்கள் என தெரிவித்தார்.
நிலாஷினி சில்வாவுக்கு ஒரு பாதிரியார் தனது ஆசீர்வாதங்களை வழங்கிய பின்னர் மீபேகம தனது குழந்தை எலியானாவை சந்தித்தார்.
“நான் எலியானாவைப் பார்த்தபோது, என் இதயம் உருகியது, அவள் அம்மாவைப் போல அழகாக இருந்தாள். எலியானாவைப் பிடிக்க அவள் இங்கே இல்லை என்பது தாங்க முடியாமலிருந்தது.
குழந்தையின் மூளை சேதமடைந்துள்ளதாகவும், தாயின் இதயம் நின்றுவிட்டபோது ஒட்சிசனை இழந்ததாகவும் மருத்துவர் கூறினார். அவரது இதயம் மற்றும் மூளை செயல்படாததால் ஒரு இயந்திரத்தால் அவளை உயிரோடு வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்று மருத்துவர் என்னிடம் கூறினார்.
எல்லா இடங்களிலும் குழந்தைக்கு குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவளால் சுவாசிக்க முடியவில்லை, அதனால் அவள் அம்மாவுடன் இருப்பது சிறந்தது என்று நான் நினைத்தேன்.” என்றார்.
மீபேகம 2009 இல் இலங்கையில் நிலாஷினியை சந்தித்தார். இது ஒரு உடனடி ஈர்ப்பு என்று கூறினார்.
“அவள் அழகான நீண்ட கூந்தலைக் கொண்டிருந்தாள், அவள் இனிமையானவள், திறந்த மனதுடையவள், நம்பகமானவள்.”
இந்த ஜோடி 2010 இல் திருமணம் செய்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்துக்கு வந்தது. நிலாஷினி நியூசிலாந்தில் படித்தார். பின்னர் உலோக நிறுவனத்தில் நிர்வாகியாக பணிபுரிந்தார். நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான திட்டங்களையும், புதிய வீட்டிற்கான சேமிப்பையும் அவர்கள் செய்து கொண்டிருந்தனர்.
மீபேகம இப்போது “தனியாக” இருப்பதாகவும், வீட்டிற்கு செல்வது தாங்க முடியாதது என்றும் கூறினார்.
“நான் மிகவும் கோபமாக இருக்கிறேன், நியூசிலாந்து சுகாதார அமைப்பு பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என்று மீபேகம கூறினார்.
“நான் ஒருபோதும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது, அது மிகவும் வேதனையானது. என் வாழ்க்கை அழிக்கப்பட்டுவிட்டது என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவை என் வாழ்க்கை, இப்போது எனக்கு யாரும் இல்லை.” என்றார்.