கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் கமக்கார அமைப்புக்குட்பட்ட வயல் நிலங்களில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல், மண் அகழ்வை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடுக்க தவறும் பட்சத்தில் குறித்த பிரதேசத்தில் விவசாயிகள் நிரந்தரமாக விவசாயத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் நீவில் கமக்கார அமைப்பு கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
02.06.2021 திகதி கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது நீவில் கமக்கார அமைப்பிற்குட்பட்ட தனியார் வயல் நிலங்களில் சட்டவிரோத மணல், மண் அகழ்வுகள் உழவு இயந்திரங்கள், ரிப்பர் வானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பொலீஸாருக்கு பல தடவைகள் அறிவித்தும், பொலீஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்தும் இதுவரை அதனை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனத் தெரிவித்துள்ள கமக்கார அமைப்பினர்.
இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வின் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற மணல் உருத்திரபும் வீதி ஊடாக பரந்தன் பூநகரி வீதியால் யாழ்ப்பாணத்திற்கும் மற்றும் கிளிநொச்சின் ஏனைய பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே தங்களது விவசாய நிலங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, குறித்த கடிதத்தின் பிரதியை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கும் பிரதியிட்டுள்ளனர்.