அமெரிக்க காவல்துறையினரால் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம்பெண்ணுக்கு பெருமைமிக்க புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு மே 25ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை மின்னிகியூ போலீஸ் நகர காவல்துறை அதிகாரி கழுத்தில் அழுத்தியதால் அவர் உயிரிழந்துவிட்டார்.
இது தொடர்பாக 18 வயது அமெரிக்க இளம்பெண் டார்னெல்லா ஃபிரேஸர் செல்போனில் பதிவு செய்த வீடியோ மூலம் இந்நிகழ்வு வெளி உலகிற்கு தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண் டார்னெல்லா ஃபிரேஸரை கவுரவப்படுத்தும் நோக்கில் அவருக்கு சிறப்பு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தனது அற்புதமான படங்கள் மூலம் 2 பிரிவுகளில் புலிட்சர் விருதினை தட்டி சென்றார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எமிலியோ மொரநாட்டி என்ற புகைப்பட கலைஞர். இவர் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பல்வேறு தீவிரமான மக்கள் போராட்டங்களின் போது சற்றும் பதற்றம் இல்லாமல் எமிலியோ பதிவு செய்த படங்கள் அவருக்கு இரண்டு புலிட்சர் விருதுகளை பெற்று தந்துள்ளன.
இன ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வழங்கியதற்காக ராய்டட் நிறுவனத்திற்கும் புலிட்சர் விருது சென்றுள்ளது. டானியா லியோன் என்பவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை போல ஊடக, புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருது புலிட்சர் விருது.
அமெரிக்கா பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912ம் ஆண்டு முதல் பத்திரிக்கை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம், ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.