வவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று (12) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பல் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட பாணினை வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட்ட போது வேப்பங்குளம் பகுதியில் வாகனத்தை மறித்து ஒருவர் பாணினை வாங்கியுள்ளார்.
வாங்கிய பாணினை உண்பதற்காக எடுத்த போது அதனுள் பிளாஸ்டிக் போத்தல் ஒன்றின் மூடி இருந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து வவுனியா சுகாதாரப் பிரிவினருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டதுடன், பாணும் சுகாதாரப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனைப் பெற்று முறைப்பாட்டை பதிவு செய்த சுகாதாரப் பிரிவினர், கொவிட் அச்சுறுத்தல் காலப்பகுதியில் வழங்கப்பட்ட பாஸ் அனுமதியைக் கொண்டு சுகாதார சீர்கேடான முறையில் குறித்த பேக்கரி செயற்பட்டுள்ளதாக பேக்கரிக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.