தூத்துக்குடியில் இருந்து கள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிக்க முயன்ற, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபரை, கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள வெள்ளப்பட்டி கடலோரப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (47) என்பவரை கியூ பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் இரவு பிடித்தனர்.
விசாரணையில் இதற்குமுன்பு அவர் கோவாவில் உள்ள ஷலிகோ என்ற பகுதியில் இருந்துள்ளார். ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா (ஓசிஐ) என்ற இந்தியக் குடியுரிமைச் சான்றைப் பெற்று, கோவாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
பின்னர் தூத்துக்குடி வந்த அவர், இங்கிருந்து இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு படகுகிடைக்குமா? என்று மீனவர்களிடம் விசாரித்துள்ளார்.
அவரிடம் இங்கிலாந்து, இந்திய, இலங்கை பணம் இருந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை, பரோடா, கோவா ஆகிய பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் 226 கிலோ கேட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடையதாக ஜோனாதன் தோர்ன் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன், கடந்த 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் வரை மும்பை சிறையில் ஜோனாதன் தோர்ன் இருந்துள்ளார். பின்னர், பரோலில் வெளிவந்த நிலையில், அவர் தூத்துக்குடி வந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற போதுகியூ பிரிவு போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ்போலீஸார் அவரை கைது செய்தனர். அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின்னர் அவரை தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் என் 1 ல் ஆஜர்படுத்தி பேராவூரணி சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து கியூபிரிவு பொலிஸார் ஜோனாதன் தோர்ன் மீது பாஸ்போர்ட் முறைகேடு வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளமை குறிப்பிடத்தகக்து.