இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற சீனாவை சேர்ந்த நபரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபரிடம் வங்கதேச விசாவுடன் கூடிய சீன பாஸ்போர்ட் இருந்ததாக தெரிகிறது, இந்தியா – வங்கதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது பி.எஸ்.எப். படையினர் இவரை கைது செய்துள்ளனர்.
பிடிபட்டவரின் பெயர் ஹான் ஜூன்வெ, இவரிடம் இருந்து ஒரு மொபைல் போன், லேப்டாப் மற்றும் மூன்று சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன, விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1300 இந்திய சிம் கார்டுகளை சீனாவுக்கு கடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்த சிம்கார்டுகள் எதற்காக கடத்தப்பட்டது, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு ஈடுபடுத்தப்பட்டதா அல்லது வேறு உளவுத்துறைக்கு வேலை பார்க்கிறாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து விசாரிக்க உத்தர பிரதேச காவல்துறையைச் சேர்ந்த நான்கு பேர் அடங்கிய பயங்கரவாத எதிர்ப்புக் குழு மேற்கு வங்கத்தின் மால்டா வந்திருப்பதாக எல்லை பாதுகாப்பு படை (தென் வங்க எல்லை பிரிவு) டி.ஐ.ஜி. எஸ்.எஸ். குலாரியா தெரிவித்துள்ளார்.
டெல்லி அருகே உள்ள குருகிராமில் விடுதி ஒன்றை நடத்தி வருவதாக கூறும் ஹான் ஜூன்வெ-வின் கூட்டாளி சுன் ஜியாங்-கை உத்தர பிரதேச போலீசார் சமீபத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.பிடிபட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை முடிந்த பின்னரே அவர்கள் எதற்காக சிம்கார்டுகளை கடத்தினார்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.