கொரோனா தொற்று இரண்டாவது அலையில் அதிகமானோர் பாதித்து இருப்பதால் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை பிறப்பித்து உள்ளன. நடிகர், நடிகைகள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தேவையில்லாமல் வெளியே போவதை தவிர்த்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பகிர்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா 2-வது அலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “சில பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள். கைகளை கழுவுங்கள், முக கவசங்கள் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிருங்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.