தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த அறிக்கை வருமாறு-
என் உயிரிலும் மேலான என் நாட்டில் வாழும் தமிழ், சிங்கள, இஸ்லாமியர் மட்டுமன்றி வேறு எந்த இனத்தவர்களையும் இன, மத வேற்றுமையின்றி நேசிப்பவன் நான். நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே அரசியலுக்கு வந்தேனே அன்றி வியாபார நோக்கோடு அல்ல. சுயநலமின்றி அரசியல் வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி பொய், புரட்டு, களவு, ஏமாற்று, இலஞ்சம் போன்றவை என்னை அனுகியதாக வரலாறு இல்லை.
2001ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 36000 வாக்குகள் அளித்து ஒன்பது பேரில் முதலாவதாக என்னை உங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தீர்கள். ஆனால் 2004ம் ஆண்டு நடந்த உண்மையை அறிவீர்களேயானால் அது தமிழ் இனத்திற்கு எதிராக செய்யப்பட்ட ஒரு பெரும் சதி என அதிர்ச்சியடைவீர்கள். தொடர்ந்து அதே போல மூன்று தடவைகள் நடந்துள்ளது. ஓர் சட்டத்தரணியாக நான் வகித்த பதவியை முற்று முழுதாக துறந்தமையால் பாராளுமன்ற ஓய்வூதியம் மட்டுமே எனது வருமானமாகும்.
எமது மக்களுக்கு அண்மைகால வரலாறு சரிவரத்தெரியாது. நீண்ட சரித்திரத்தை இங்கே எழுத முடியவில்லை. ஆனால் சில வரலாற்று உண்மைகளை சரிவரத்தெரியாதமையால் தலைமைகள் தடுமாறுவதும் மக்கள் ஏமாறுவதும் சகஜமாக போய்விட்டது. சிலரை பாராளுமன்றம் போகவைத்ததை தவிர வேறு எதுவித பலன்களையும் நம் மக்கள் அடையவில்லை. சில முக்கிய விடயங்கள் சம்பந்தமாக மட்டும் குறிப்பிடுகின்றேன். நான் இங்கே குறிப்பிடுபவை முற்று முழுதாக உண்மையே அன்றி யாரையும் குறிவைத்தல்ல. எவ்வளவு காலம் கடந்தாலும் உண்மைகள் திரிக்கப்படக்கூடாது. இன்று அது தான் நடக்கிறது. ஆகவே இப்பத்திரம் என்னால் எழுதப்பட்ட மரணசாசனமாக கூட அவசியம் ஏற்படும் போது எவரும் உபயோகிக்கலாம்.
எமது சரித்திரத்தில் மிக முக்கியமானது 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி நம் நாடு பிரித்தானியரிடமிருந்து சுதந்திரமடைந்த நாளாகும்.
இதை ஒட்டி பிரித்தானிய விசாரனைக் குழுவிற்கு ஆலோசனை வழங்க அன்றைய தமிழ் பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட அரசியற் கட்சியே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியாகும். தமிழ் தலைவர்கள் அமரர்கள் சா.ஜே.வே.செல்வநாயகம் (ஞஊ), ஜீ.ஜீ.பொன்னம்பலம் (ஞஊ) ஆகியோரின் திறமைக்கேற்ப அரச சட்டத்தரனிகளாக பிரித்தானிய அரசால் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார்கள். துரதிஸ்டவசமாக ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக பிளவுபட்டு முன்னவர் தமிழரசுக் கட்சியையும் மற்றவர் தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கும் தலைமை தாங்கினர். 1970ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திருமதி ஸ்ரீமாவோ பண்டாராநாயகா அவர்களின் கட்சி புதிய அரசியற் சாசனம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டவேளை, தமிழ் மக்களின் உரிமை பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் அபாயத்தை உணர்ந்த இவ் இரு தலைவர்களும் 23 ஆண்டு கால பகைமையை மறந்து ஒன்று சேர்ந்த நிகழ்வை அறிந்த, உலகளாவிய ரீதியில் வாழ்ந்த இலங்கைத் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இணைப்பை ஏற்று, தம் மத்தியில் இருந்த வேற்றுமைகளையும் மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்தனர். அதன் விளைவாகவே சர்வதேச சமூகரீதியாக 1972ம் ஆண்டு தமிழர் ஐக்கிய முன்னனி உருவாகி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயர் மாற்றம் பெற்றது. அக் கூட்டை இயக்கி வைத்தவர்கள் தமிழ் தலைவர்கள் அமரர்கள் சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மலையக தலைவர் சௌமியமூர்த்தி தொன்டமான் ஆகியோர் ஆகும். மீண்டும் எக்காரணம் கொண்டும் பிரியக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதிலும் வலுவான ஓர் தமிழ் அமைப்பு இதுவரை உருவாகவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடவடிக்கைகள் பற்றி இன்றைய சமூகத்தினருக்கு பெரியளவில் தெரியாது. எமது கட்சியை வளர்ப்பதற்காக தலைவர்கள் தந்தை செல்வா, ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் ஆகியோரோடு, பாராளுமன்ற உறுப்பினர்களும் பெருந்தொகையான இளைஞர்களும் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். தம்மை பலிகொடுத்தவர்களும் பலர். என்னும் பலர், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், திருமதி மங்கையக்கரசி அமிர்தலிங்கம் போன்ற பெண்கள் பலர் அடங்கலாக பட்ட பல்வேறு துன்பங்கள் சொல்லில் அடங்கா. இக் கூட்டு அன்று உலகயே சிந்திக்கவைத்தது.
முழு தமிழ் சமுதாயம் ஒன்றினைந்து எம்மில் 18 பேரை பாராளுமன்றம் அனுப்பி வைத்த வரலாறு உள்ளது. அன்றைய அரசின் ஜனநாயக விரோத செயல்களை கண்டித்து அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி துறந்து, உலக சாதனையை நிலைநாட்டி அனைவராலும் பாராட்டப்பட்ட அரிய சம்பவம் இன்றைய சமூகத்திற்கு தெரியாது. மேலும் சட்ட மறுப்பில் ஈடுபட்டு கைதி உடையுடன் நான் மறியலுக்கு போன சம்பவமும் குறிப்பிட வேண்டும். 1983ம் ஆண்டு அன்று நாம் செய்த தியாகம் போன்று இன்று வரை 38 ஆண்டுகளுக்கு பின்னும் நடைபெறவில்லை. எத்தனை கொலைகள், கண்டனங்கள், அவமானங்கள் என நாம் அனுபவித்தோம் என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாது. தெரிந்தவர்கள் வெளிப்படையாக கூற ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை. சமுத்திரம் போன்ற எமது வரலாற்றில் ஒரு துளியைப் பற்றித்தான் நான் பேசுகின்றேன். எமது சில தலைவர்களுடைய கொலைகள் பற்றி இன்றைய தலைவர்கள் பேசவிரும்புவதில்லை. என் மீது கூட கொலை முயற்ச்சி பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் வெற்றிபெறவில்லை. நான் அதைப் பற்றி கவலைப்பட்டதுமில்லை.
இப்படி சொல்ல முடியாத பல சோக சம்பவங்களை எதிர் நோக்கிய பொதுமக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு என்ன நடந்தது என்று இதுவரை எவரும் கேள்வி எழுப்பாதமை ஆச்சரியத்தை தருகிறது.
இத்தகைய ஓர் பாரம்பரிய கட்சியின் செயலாளர் நாயகம் திரு.அமிர்தலிங்கம் அவர்கள் 13.07.1987ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதோடு பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். சில தலைவர்கள் பதவி தேடினர். திரு. அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலைக்குப் பின் கட்சிக் காரியாலயத்திற்கு ஒரு சிலரைத் தவிர ஏனையோர் வருவதை நிறுத்திக் கொண்டனர். நான்கு ஆண்டுகளின் பின்பு கூட அதாவது 1993ம் ஆண்டு கட்சியை கூட்டுவது பெரும் சிரமமாக இருந்தது. அங்கத்தவர்கள், கட்சித் தொண்டர்கள் என சமூகம் கொடுத்தவர்களில் பாதிப்பேருக்கு மேல் வெறும் அனுதாபிகளே அவர்களை வைத்தே கட்சியை மீளமைத்தோம். செயலாளர் நாயகம் பதவியை தனக்கே தர வேண்டும் என அடம்பிடத்தவருக்கே ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக வழங்கினோம். ஆனால் 13 ஆண்டுகள் அவர் ஒரு தடைவையேனும் சபையை கூட்டவில்லை, புதிய உத்தியோகத்தர் தெரிவும் நடத்தவில்லை. அப்படி செய்வதற்கு அவருக்குப் பின் ஒரு வலுவான சக்தியிருந்தது. திரு. அமிர்தலிங்கம் அவர்களுடைய தேசிய பட்டியல் நியமனம் கூட சட்டவிரோதமானது மட்டுமல்ல, எம்மில் ஒருவர் அடம்பிடித்தமையால் அவருக்கே வழங்கப்பட்டது. இதனால் வெறுப்படைந்த உறுப்பினர்கள் பலர் இன்னும் இருக்கின்றார்கள். இவ்விரு நியமனங்களையும் எதிர்த்து விமர்சித்த சிலர் முன்னிலையில் நான் தலைகுனிந்து நிற்கிறேன்.
இத்தகைய பல இடைஞ்சல்கள் மத்தியில் மிகவலுவான சக்தியை எதிர்த்து நம்மவரில் சிலர் கட்சியை காப்பாற்றினோம்.
இக்கட்டத்தில் இனப்பிரச்சனையை தீர்க்கக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு ஏற்பட்டது. மட்டக்களப்பு மறுமலர்ச்சி மன்றத்தார் ஆற்றிய பெருந் தொண்டினால் சகல தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒரு சின்னத்தில் அதே கட்சியின் சகல வேட்பாளர்களும் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். எதுவித பேதமுமின்றி ஆயுதக்குழுக்கள் அத்தனையையும் ஒன்று சேர்த்து போட்டியிடுவதாக முடிவெடுத்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி எட்டு மாவட்டங்களிலும் இப் பிரேரணை ஏற்கப்பட்டிருக்க, தன் சதித்திட்டத்தை செயல்படுத்த செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அமிர்தலிங்கம் அவர்களின் வெற்றிடத்திற்கு நியமனம் பெற்ற நபரோடு வன்னிக்குச் சென்று தமிழ் செல்வன் வகுத்துக்கொடுத்த திட்டத்திற்கமைய ஏப்பிரல் மாதம் நடைபெற வேண்டிய தேர்தலின் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்து, விடுதலைப் புலிகளின் சார்பில் தாக்கல் செய்வதாக பகிரங்கமாக கூறி விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் யுத்தத்தை முடிக்க தேடிவந்த வாய்ப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இச் சதித்திட்டத்தின் முன்னோடியாகவே கூட்டணியை போட்டியிடாமல் தடுப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் என்ற கோதாவில் அத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடும் என அறிவித்திருந்தார். அதன் விளைவாக உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட முடியாமல் போக சுயேட்சையாக போட்டியிட்டு படுதோல்வியடைய நேர்ந்தது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பால் செய்யப்பட்ட வராலாற்று துரோகம் மட்டுமல்ல ஒரு திட்டமிட்ட சதியும் ஆகும். 2004ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 02ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் சட்டத்திற்கு முழு விரோதமாக தமிழரசுக் கட்சியின் சின்னமாகிய வீட்டில் விடுதலைப் புலிகளின் சார்பில் போட்டியிடுகிறோம் என்று கூறி, மக்களை ஏமாற்றி தேர்தல் முடிந்ததும் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அடுத்த ஆறு ஆண்டு காலத்தில் நடந்த கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல் ஆகிய சம்பவங்கள் அத்தனைக்கும் பொறுப்புக் கூற வேண்டியிருந்தும் இறுதிவரை மௌனம் சாதித்தனர். அதுமட்டுமன்றி 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி அன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட மகாநாட்டில் 22 பேரில் ஒருவரேனும் வருகை தந்திருந்தால் அத்தனை மக்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற அனுமதி பெற்றிருக்க முடியும். அதே கலந்துரையாடலில் வன்னியில் அகப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை என்னும் 83,000 பேர் வரை இருக்கும் என்ற ஜனாதிபதியின் கூற்றிற்கு மறுப்பு தெரிவித்து மூன்றரை இலட்சம் மக்கள் என கூறிய என்னை ஜனாதிபதி திட்டியதும் மூன்று இலட்சம் பேருக்கு உணவு அனுப்புகிறேன், என்று கூறியதும் உலகறிந்த உண்மை. இந்த மக்களுக்கு என்ன நடந்தது என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அறிய முயற்ச்சித்தார்களா?
போரில் இறந்தவர்களாக கருதப்படும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களில் பெரும் பகுதியினரை காப்பாற்றக் கூடிய நிலமை இருந்தும் ஒருவரைத் தன்னும் காப்பாற்ற முடியாதமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கையாலாகாத தன்மையை காட்டுவதுடன் இன ஒழிப்பிற்கும் வழிவகுத்தது. அந்தநேரம் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் குடாநாட்டில். பட்டத்திற்கோ பதவிக்கோ நான் விலை போகாதமையால் அமரர்கள் சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வா, மு.சிவசிதம்பரம், திரு.திருமதி.அ.அமிர்தலிங்கம் ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவன் நான். அன்று அரசு தந்த பதவியையும் தேர்தல் நிதியையும் ஏற்க மறுத்தமை உலகறிந்தமை.
கட்சியின் தற்போதைய நிதி நிலமை
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிதி நிலமைகள் மிக மோசமானதாகும். அன்று மட்டுமல்ல இன்றும் கூட இதே நிலைமை தான்.
அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் விடுதலைப் புலிகளின் சார்பில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்தவுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகப் பதவியை கன்னியமான முறையில் இராஜினாமா செய்து கட்சியையும் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் கையளித்திருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் முடிந்து மேலும் ஆறு வருட காலங்கள் அடாத்தாக அப் பதவியையும் வகித்துக் கொண்டார். இறுதியில் அவரை நீக்கி என்னை அப் பதவிக்கு நியமிக்க ஆறு ஆண்டுகள் சென்றன. அந்த இடைப்பட்ட ஆறு ஆண்டுகளும் ஒரு வித நிதி உதவியும் இன்றி மிகவும் கஸ்டப்பட்டோம். அக் காலப் பகுதியில் செலவான என் சொந்தப்பணம் 50 இலட்சத்திற்கு மேல் என அன்றைய தேர்தல் ஆணையாளருக்கு தெரிவித்திருந்தோம். மிகச்சிரமப்பட்டே ஆணையாளர் அன்றைய செயலாளர் நாயகத்தை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் இன்றுவரை நான்கு ஆதரவாளர்கள் கொடுத்து உதவிய சிறு தொகைகளை விட வேறு எவரும் எதுவித உதவியும் இன்றுவரை செய்யவில்லை. ஏறக்குறைய (17 ஆண்டுகள்) அதே நிலைமை நீடிக்கிறது. ஆனால் எனக்கு யுனஸ்கோ விருதுடன் கிடைத்த ஒரு கோடி ரூபா பணம் கட்சியை நடத்துவதற்கு பெருமளவில் உதவியது. இந்த இடைப்பட்ட காலத்தில் அன்று தொட்டு இன்று வரை இந் நிலைமை மோசமாக இருந்த போதிலும் போட்டியிட்டு சகல தேர்தல்களிலும் கலந்து கொண்டோம். தேர்தல் நிதியாக சேர்க்கப்பட்ட பணத்தில் ஒரு சிறு தொகையே எம்மை வந்து சேர்ந்தது.
இது போன்ற பல விடயங்களை குறிப்பிட முடியும். இங்கே குறிப்பிட்டுள்ள விடயங்களில் எவையேனும் பிழையென யாரேனும் சுட்டிக் காட்டினால் அதற்குரிய தண்டனையை ஏற்க தயாராக உள்ளேன்.
1. இன்றுள்ள அரசியல் கட்சிகளில் தமிழ் இனத்தைப் பற்றி பேசுகின்ற சகல உரிமைகளும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மட்டுமே உண்டு. பெருந்தலைவர்கள் காட்டிய வழியில் பல இன்னல்களை தாங்கி கூட்டணியை பாதுகாக்கும் பெரும் பங்கை இன்றும் வகிக்கின்றேன்.
2. ஆகவே இனப்பிரச்சனை சம்பந்தமாக நான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருமாறு அனைவரையும் வேண்டுகின்றேன். எம்மில் நம்பிக்கை கொண்டவர்களை கூட்டணி வரவேற்கிறது.
3. பெருந்தலைவர்களால் நிறுவப்பட்டு அநியாயமான முறையில் சுயநலமிகளால் சிதைக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கோலோச்ச வைக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. புத்துயிர் பெறும் போது தனது பழைய உச்சநிலைமையை அடையும் என்ற நம்பிக்கை அனேகருக்கு உண்டு.
4. நீதிக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பெரியோர்களாக மதிக்கப்படுகின்ற எவராவது 10 பேர் நடந்தவற்றை ஆராய்ந்து அறிந்து தீர்வை எம் தலைவர்களாகிய அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், சா.ஜே.வே.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகியோர் தரும் தண்டனையாக ஏற்க தயாராக உள்ளேன்.
5. 2004ம் ஆண்டு 22 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வென்றதாக கூறப்படும் மர்மம் என்று துலங்கி பரிகாரம் தேடப்படுகின்றதோ அன்று தான் எமது விடிவு காலம் ஆரம்பிக்கும். நம் தமிழர் விடுதலைக் கூட்டணி உயிர் பிழைக்கும். இழந்த சகல உரிமைகளை தமிழ் மக்கள் மீளப் பெறுவர்.
முக்கிய வேண்டுகோள் : கோலோச்ச வேண்டிய குழு இன்று குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கிறது. எமது அரும் பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட எமது கட்சி இன்று அன்பர்களின் கவணக்குறைவால் ஒரு தப்பும் செய்யாமலே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. தலைவர்கள் மீது பற்றுக் கொண்டவர்கள் அவர்களுக்கு காட்ட வேண்டிய மதிப்பை உங்கள் சொந்த முயற்சியால் எமது கட்சியை புணரமைக்க வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.