இலங்கையர்கள் நாடு திரும்புவது குறித்த புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் இந்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்களுள் இந்தியா,வியட்நாம்,தென் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றிருந்த எந்தவொரு பயணிகளுக்கும் இலங்கை வருவதற்கு அனுமதி இல்லையென அண்மையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
எனினும் மேற்படி நாடுகளுக்கு சென்றிருந்த அதேவேளை கொவிட் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ள இலங்கையர்கள், இரட்டை குடியுரிமை கொண்டவர்கள், இந்த நாடுகளில் இடைமாறல் பயணிகள் இலங்கை வர அனுமதிக்கப்படுவர். இவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இலங்கை வரும் இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் ஆங்கிலத்தில் அல்லது முறையான மொழிபெயர்ப்பை கொண்ட கொரோனா எதிர்மறை பரிசோதனை முடிவை கொண்டு வர வேண்டும்.
தரையிறங்குவதற்கு 96 மணி நேரம் முன்னதாக செய்யப்பட்ட பிசிஆர் அல்லது 48 மணி நேரத்தின் முன்னர் செய்யப்பட்ட அன்டிஜன் சோதனை அறிக்கையை கொண்டு வர வேண்டும்.
இருப்பினும், புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்குள்ளான எதிர்மறை பிசிஆர் சோதனை அறிக்கையை விமான நிறுவனங்கள் கோரக்கூடும்.
புதிய வழிகாட்டலின்படி, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்ற 14 நாட்களின் பின் நாட்டுக்கு வரும் இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோர் கட்டாயமாக 14 நாட்கள் சுயத்தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டும்.
வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள், தமது வீடுகளிற்கு சென்றதும் பிரதேச சுகாதார உத்தியோகத்தர்களிற்கு அறிவிக்க வேண்டும். 14நாட்களின் பின் பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஜூன் 30 வரை இது நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.