சந்திமல் ஜெயசிங்க, பியூமி ஹ்ன்சமாலி குழுவினரை தனிமைப்படுத்த அரச உயர்மட்டத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தான் தலையீடு செய்யவில்லையென மறுத்துள்ளார் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.
ஷங்கரிலா ஹொட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குழுவினரை விசாரணைக்கென பொலிஸ் நிலையம் அழைத்து, மாற்று உடை கூட இல்லாமல் பசறை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அப்போது பியூமி ஹன்சமாலி சரத் வீரசேகரவை தொலைபேசியில் அழைத்து உதவி கோரியதாகவும், அதன்படி அவர்களை தனிமைப்படுத்தலிற்கு அழைத்து செல்லாமல் திரும்ப அழைத்து வரும்படி சரத் வீரசேகர கட்டளையிட்டதாகவும், எனினும், அரசின் உயர்மட்ட கட்டளையன கூறி, பொலிசார் அதை ஏற்கவில்லையென்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவியது.
இது தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
02.06.2021 மாலை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சட்டத்தரணி மஞ்சு சிறி, தனது வாடிக்கையாளர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாகவும், அவர்களிற்கு மாற்று உடை கூட இல்லையென்றும், அவர்கள் மாற்று உடையை எடுக்க அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
அதன் பின் ஒரு பெண் அழைப்பேற்படுத்தி, தன்னை பியூமி ஹன்சமாலி என்று அறிமுகப்படுத்தி, தாம் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்படுவதாகவும், தமக்கு மாற்று உடை கூட இல்லையென்றும்,மேலதிக உடைகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
அதன்பிறகு சந்திமல் ஜெயசிங்கவும் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு மேற்கண்ட கோரிக்கையை உறுதிப்படுத்தினார்.
பின்னர் அமைச்சர் இது தொடர்பாக பொலிஸ்மா அதிபர், மற்றும் மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டு பேசினார். பொலிஸ்மா அதிபருக்கு தகவல் வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்
அவர்கள் பேருந்தில் இருக்கும்போது, வீடுகளில் இருந்து தேவையான உடைகள் உள்ளிட்ட நலன்புரி பொருட்களை கொண்டு வரப்பட்ட பின்னர், பதுளை பசறை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு பேருந்து அனுப்பப்பட்டது.
எந்த சந்தர்ப்பத்திலும் பேருந்தை திரும்பி வருமாறோ, அவர்களை தனிமைப்படுத்தப்படக்கூடாது என்றோ அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கப்படவில்லையென தெரிவித்துள்ளார்.