தமிழில் “மின்சார கனவு” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜோல். அதில் கஜோல் பாடிய, பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை, பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து அனைவரையும் கவர்ந்திழுத்தது. “வேலை இல்லா பட்டதாரி 2”-ம் பாகத்தில் தனுசுடன் நடித்திருந்தார்.
ஹிந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அவர் நடிகர் அஜய்தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். அஜய் தேவ்கன் ஹிந்தியில் புகழ்பெற்ற கதாநாயகனாக இருக்கிறார். சூர்யாவின் “சிங்கம்” படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடித்திருந்தார்.
கஜோலும், அஜய்தேவ்கனும் இணைந்து மும்பை ஜுகு பகுதியில் ரூ.60 கோடிக்கு புதிய பங்களா வீட்டை வாங்கி இருக்கிறார்கள். இந்த பங்களா அமிதாப்பச்சன், ஹிருத்திக் ரோஷன், தர்மேந்திரா, அக்ஷ்ய்குமார் ஆகியோர் வீடுகளின் அருகிலேயே அமைந்துள்ளது. கஜோலும் அஜய்தேவ்கனும் சில வருடங்களாகவே புதிய பங்களா வீடு வாங்க திட்டமிட்டு தற்போது இதனை வாங்கி உள்ளனர். இந்த வீட்டுக்கான பத்திரப்பதிவு முடிந்துள்ளது. விரைவில் இங்கு குடியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.