கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு மிக அவசியமானது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்துகிறது. மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் தடுப்பூசியிலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் அர்ச்சகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தை கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண் தொடங்கிவைத்தார். இதற்கு பல தரப்புகளிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜாதி அடைப்படையில் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் கடுமையாக சாடியுள்ளனர்.
இந்த தடுப்பூசி போடும் திட்டம் பார்ப்பனர்களுக்காக மட்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கேள்வி கேட்பவர்கள் தடுப்பூசி போடும் மையத்தில் இருந்து துரத்தப்பட்டதாகவும் காங்கிரஸ் ராஜ்ய சபா எம்.பி ஹரிபிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடுவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. முன்களப் பணியாளர் பட்டியலில் அர்ச்சகர்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கப்படுகிறது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.