எதியோப்பியாவின் டைக்ராய் மாகாணத்தில் உள்ள 90% மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “ டைக்ராய் மாகாணத்தில் நிகழ்வது நமக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. அம்மாகாணத்தில் நிலவும் மோதல் காரணமாக சுமார் 90% மக்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் இனக்குழுக்களிடம் மோதல் நிலவுகிறது. எங்களுக்கு இது கவலையளிக்கிறது. இந்த ஆண்டு இறுதிவரை டைக்ராய் மாகாணத்திற்கு உதவிபுரிய இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2019-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டது. அண்டை நாடான ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவிவந்த ராணுவ ரீதியிலான சிக்கலை கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்கு கொண்டுவந்தார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சொந்த நாட்டில் நிலவும் இனக்குழு பிரச்சனைகளை அபய் அகமதுவால் முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லையா? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.