உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் திகதி துவங்கவுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் திகதி வரை இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர் பேசி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் ரமேஷ் ராஜாவும் இப்போட்டி குறித்துப் பேசியுள்ளார். அப்போது, இந்திய வீரர் ஒருவரால் இறுதிப் போட்டியில் இரட்டை சதம் அடிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
ரமேஷ் ராஜாவின் பேட்டி:
“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பௌலர்களை சமாளித்து ரோஹித் ஷர்மாவால் இரட்டை சதம் அடிக்க முடியும். இவர் முதல் இன்னிங்ஸில் சிறிது நேரம் செட்டாகி விட்டால் போதும் இரட்டை சதம் உறுதிதான். ஆட்டத்தின் போக்கை அறிந்து அதற்கேற்றாற்போல் தன்னுடைய பேட்டிங் ஸ்டெய்லை மாற்றிக்கொள்ளும் பக்குவம் ரோஹித்திற்கு உண்டு” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “எனவே ரோஹித் நிச்சயம் இரட்டை சதம் அடிப்பார் என நம்புகிறேன். சௌதாம்ப்டான் மைதானத்தில் துவக்கத்தில் இந்திய அணி திணறினாலும் பிறகு தன்மை அறிந்து சிறப்பாக விளையாடுவார்கள் எனவும் நம்புகிறேன். ஓபனர்கள் ரோஹித், ஷுபமன் கில் இருவரும் நிதானமாக விளையாடி அதிக ரன்கள் குவிக்கும்பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும்” எனத் தெரிவித்தார்.