கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண தொற்றுநோயியல்
மருத்துவமனையில் 14 நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்றுத் திரும்பி
கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் ஆசிரியரான ப தயாளன் அவர்கள்
தனது முகநூலில் வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் இவ்வாறு
பதிவிட்டுள்ளார்.
இயமனின் பாசக்கயிற்றுடன் அலையும் எருமைக்கடாவுக்கு நிகரானதாக கருதி
அஞ்சிய கொரோனாவை கண்டு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஒப்பந்தம் செய்து
திரும்பியாயிற்று. இப்போது யோசித்தால் தலையிடி போன்ற சாதாரண ஒரு விடயம்
தானோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
நோயைக் கண்டு அச்சமடையாது எதிர்கொண்டால் மீண்டு விடலாம் என்ற அனுபவ பாடம்
வந்துவிட்டது. சிகிச்சைக்குரிய காலப்பகுதியில் மிக உல்லாசமான பொழுது
போக்கு மையத்தில் இருந்து விட்ட உணர்வு தான் ஏற்பட்டது. அதற்கு என்னை
கொண்டு போய் இறக்கிய இடம் காரணமாக இருந்திருக்கலாம்.
வட மாகாணத்தின் முதலாவது கொவிட் தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH –
கிருஸ்ணபுரம்) தான் கொண்டு போய் இறக்கினார்கள். அது புண்ணியம்
செய்தவர்கள் சிகிச்சை பெறும் இடம் என்று நினைக்கிறேன். நோயாளர்களின் நிலை
சௌகரியமானது. திருப்திகரமானது. அமைதியான சூழல், விசாலமான இடப்பரப்பு,
நிறைவான தங்குமிட விடுதி அறைகள், சுத்தம், சிகிச்சை அளிக்கும் முறை
என்பவற்றில் முன் வைப்பதற்கு எந்த விமர்சனமும் கிடையாது. ஏனைய இடங்களில்
அமைந்துள்ள இத்தகைய சிகிச்சை நிலையங்கள் பற்றி மாறுபட்ட அபிப்பிராயங்கள்
சொல்லப்பட்டாலும் இது மிகச் சிறப்பான இடம்.
இதனை கடந்த ஆண்டு இங்கு நிறுவத் தொடங்கிய போது பிரதேசத்தில் காட்டப்பட்ட
எதிர்ப்புகளை மீறியே இது அமைக்கப்பட்டது. முதலில் வட மாகாணத்தின் தொற்று
நோய் வைத்தியசாலையாக அக்கராயன் பிரதேச மருத்துவமனையை மாற்றியமைக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை சிங்களவர்களைக் கொண்டு வந்து சிகிச்சை
அளித்து ஊருக்குள் கொரோனாவை விதைக்கும் திட்டம் என்று நமது
தீர்க்கதரிசிகள் குய்யோ முறையோ என்று குளறி தடுத்ததர்கள். அதன் பின்னர்
தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் கிருஸ்ணபுரம். இதற்கெதிராகவும்
ஆர்ப்பாட்டங்கள், கதறல்கள் எழுந்தன தான். ஆயினும் யாருடையதோ
விடாப்பிடியால் அது அமைந்து வி;ட்டது. அதன் மிக உச்சப் பயனை வட
மாகாணத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் தொற்றுக்குள்ளான அத்தனை பேரும்
பெற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா
வாசிகள் அதிகமானோர் இங்குள்ளனர்.
நோயாளிகளை CCTV வழியாக மருத்துவர்கள் கண்காணிக்கின்றனர். மருந்து
மாத்திரைகள் குறித்த இடத்தில் உள்ள மதில் தூணுக்கு மேலே
வைக்கப்படுகின்றன. போய் எடுத்து உட்கொள்ள வேண்டும். அவசர நிலைகளின் போது
தாதியர்கள், மருத்துவர்கள் விடுதிகளுக்கு வருகின்றனர். அவசர சிகிச்சைப்
பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
நோயாளர்கள் தங்கும் விடுதிகளுக்குள் அநாவசியமாக வேறெவரும் வருவதில்லை.
விடுதிகளைச் சுத்தமாக பேணுகின்ற கடப்பாடு நோயாளிகளுக்குரியது. நோய்த்
தொற்று இருப்பினும் 95 வீதத்திற்கு அதிகமானோர் சுறுசுறுப்பாக சுயமாக
இயங்கக்கூடியவர்கள் தான். அதிலும் மிக அதிகமானவர்கள் இளைஞர்கள். அவர்கள்
கவனம் எடுக்கும் போது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சாத்தியம் கூடுகின்றது.
எமது விடுதியில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இருந்து தொற்றுக்குள்ளான
பொலிசார் சிலரும் இருந்தனர். காலையில் நாம் எழுந்து வருவதற்குள்
கிடக்கின்ற குப்பை கூழங்கள் எல்லாவற்றையும் வாரி அள்ளிக் கொட்டி,
குளியலறைகள், கழிப்பறைகள் எல்லாவற்றையும் துப்பரவு செய்துவிட்டு
சாவகாசமாக அமர்ந்திருக்கிறார் அவர்களில் ஒருவர். அவரது தாய்மொழி தமிழ்
அல்ல. விடுதிகளைச் சுற்றிப் புதிதாக பழமரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மாலையில் அவற்றுக்கு நீர் அள்ளி ஊற்றுகிறார்.
‘சட்டப்படி இருக்குது இடம்’ என்று இதைப் பற்றி சொன்னார் சிகிச்சை பெறும்
கிளிநொச்சியைச் சேர்ந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர். புகுமுக
மாணவராக இருந்த போது, பல்கலைக்கழக மாணவர் சங்கம் கடந்த ஆண்டு தன்னை இந்த
இடத்தில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யுமாறு கொண்டு வந்து
இறக்கிவிட்டதாக அவர் சொன்னார். என ஆசிரியர் தயாளன் அவர்கள் தனது
முகநூலில் பதிவிட்டுள்ளார்.