குருகிராமின் துண்டாஹெரா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண்டிபயாடிக் ஊசி போடப்பட்ட நிலையில், 34 வயது பெண்ணின் இடது கை தொற்று காரணமாக கருப்பு நிறமாக மாறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 23 ம் தேதி கருக்கலைப்பு செய்த பின்னர் அந்தப் பெண்ணுக்கு ஊசி போடப்பட்ட நிலையில், கருப்பு நிறமாக மாறியுள்ளது. பெண்ணின் கணவர் மருத்துவமனைக்கு எதிராக மாவட்ட சுகாதாரத் துறையில் புகார் அளித்துள்ளார்.
வினிதா என்ற 34 வயது பெண் தற்போது தனது கணவர் சர்பராஸுடன் குருகிராமின் சக்கர்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். ஏப்ரல் 23 ஆம் தேதி, அவரும் அவரது மனைவியும் குருகிராம் துண்டஹேரா கிராமத்தில் அமைந்துள்ள பார்க் மருத்துவமனைக்கு கருக்கலைப்பு செய்வதற்காக சென்றதாக சர்பராஸ் கூறினார்.
“கருக்கலைப்புக்குப் பிறகு, மருத்துவமனையின் மருத்துவர்கள் என் மனைவிக்கு ஒரு ஆண்டிபயாடிக் ஊசி செலுத்தினர், அது அவரது உடலில் ஒரு எதிர்வினையை ஏற்படுத்தியது. எதிர்வினை பரவுவதால் வலது கையை வெட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்.” என்று சர்பராஸ் கூறினார்.
“மருத்துவமனையின் தரப்பில் அலட்சியம் இருந்தபோதிலும், அவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்கத் தயாராக இல்லை. மேலும் அறுவை சிகிச்சைக்கு பெரும் தொகையைக் கேட்கிறார்கள்.” என்று அவர் மேலும் கூறினார்.
ஆண்டிபயாடிக் ஊசியின் எதிர்விளைவு காரணமாக அவரது கையில் தொற்று பரவியுள்ளதாகவும், 6-8 மணி நேரத்திற்குள் கை அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், கையை வெட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் மருத்துவர்கள் சொன்னதாக அவர் கூறினார். ஆனால் அவர் நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையை அடைந்ததால், இப்போது மேலும் தொற்றுநோயைத் தடுக்க கையை வெட்டுவதைத் தவிர வேறுவழியில்லை எனக் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக வேலையில்லாமல் இருந்ததால், சாப்பிட உணவு இல்லாததால், குடும்பம் கஷ்டத்தில் உள்ள நிலையில், சமீபத்தில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் குடும்பத்திற்கு சில உணவு வகைகளை வழங்கியது என்றும் இப்போது தனது மனைவியின் ஆபரேஷனுக்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறினார்.
இதற்கிடையில், குருகிராமின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் வீரேந்தர் யாதவ், “இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறை எந்தவொரு புகாரையும் பெறவில்லை. இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறினார்.