2021 இறுதிக்குள் முழு தகுதியுள்ள மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் கூறியது. உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களான எஸ்ஐஐ, பாரத் பயோடெக் மற்றும் ரெட்டீஸ் லேப் ஆகியவற்றிலிருந்து மேற்கொள்ளப்படும் தடுப்பூசி உற்பத்தி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட போதுமானதாக இருக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ஆர்.பட் ஆகியோரின் அமர்வில் தெரிவித்தார்.
தவிர, தடுப்பூசி அளவுகளை வழங்குவதற்காக ஃபைசர் போன்ற நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அரசாங்கம் இதில் வெற்றி பெற்றால், ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போடுவதற்கான காலக்கெடு மாறி, முன்னதாகவே அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்குவது தொடர்பான ஒரு வழக்கில் விசாரணையின் போது மத்திய அரசின் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகளை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டர்களை வெளியிடும் பணியில் மாநிலங்கள் உள்ளன என்ற உண்மையை குறிப்பிட்டு, தடுப்பூசி-கொள்முதல் கொள்கை குறித்து நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டிருந்தது.
“இது மத்திய அரசின் கொள்கையா?” என கொரோனா தடுப்பூசிக்கான கோவின் வலைதள கட்டாய பதிவு குறித்து உச்சநீதிமன்றம் கேட்டதுடன், “கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இதனால் சிரமங்களை சந்திக்க நேரிடும்” என்று குறிப்பிட்டது.
முன்னதாக, கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கும், தொற்றுநோய்க்கு ஒரு பொது சுகாதார பதிலை எளிதாக்குவதற்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விஞ்ஞான அடிப்படையில் ஆக்ஸிஜனை ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு வழிமுறையை வகுக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.