யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களில் நாளை கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் தற்போது நடந்து வருகிறது.
சுமார் 45 நாடுகள் இன்னும் தடுப்பூசி மருந்துகளை வழங்கத் தொடங்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கூறினார், இலங்கை பல அளவுகோல்களின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்து விட்டது என்றும் கூறினார்.
மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை, சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை, COVID-19 இறப்புகளின் எண்ணிக்கை என்பவற்றிற் அடிப்படையில் தடுப்பூசி வழங்கும் மாவட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன என்றார்.
இரண்டு மாவட்டங்களிலும் சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கப்படும். இண்டு மாவட்டங்களிற்கும் இன்று தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் சேமித்து வைக்கப்படும்.
யாழ்ப்பாணத்திற்கு 50,000 தடுப்பூசிகள் இன்று வருகின்றன.
கடந்த 2-3 மாதங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட, இறப்பு பதிவான, தொற்று சாத்தியமுள்ள என்ற அடிப்படையில், தத்தமது பகுதிகளில் தடுப்பூசி செலுத்த வேண்டிய கிராம சேவகர் பிரிவுகளை சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவு செய்வார்கள்.
அந்த விபரம் மத்திய சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டு, தடுப்பூசி வழங்கப்படும். முதற்கட்டமாக யாழில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி செலுத்தப்படும். 4 நாட்களிற்கு தடுப்பூசி திட்டம் செயற்படுத்தப்படும்.
இதற்கிடையில், ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி, கண்டி மாவட்டத்தில் இன்று வழங்கப்படும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும், அரச மருந்துக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்ட சீன தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸின் மற்றொரு தொகுதி ஜூன் 6 ஆம் திகதி இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். .