யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் வெளியீட்டில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
‘கே.ஜி.எஃப்’ படத்தைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளைக் கவனித்துக் கொண்டே, பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தையும் இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.
ஜூலை 16-ம் தேதி ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆனால், கொரோனா 2-வது அலையின் தீவிரத்தால் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், அனைத்து மொழிகளிலும் டப்பிங் பணிகள் வேறு இருக்கின்றன.
இதனால் ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் திட்டமிட்டபடி ஜூலை 16-ம் தேதி வெளியாகாது எனக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக புதிய தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.