கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே தீப்பற்றியுள்ள எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் அதிகரிக்குமாயின் அதிலுள்ள எரிபொருள் கடலில் கலப்பதை தடுக்க முடியாது.
தற்போது நிலவும் காலநிலை காரணமாக உபகரணங்களைப் பயன்படுத்தி எரிபொருள் கடற்பரப்பில் பரவுவதை தடுப்பதும் சிரமமாகும்.
எனவே எரிபொருள் கசிவு ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தூய்மைப்டுத்துவதே தற்போதுள்ள ஒரே மாற்று வழி என்று தேசிய கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
இதே வேளை தீப்பரவலால் நைதரசன் வாயு வெளியேறியுள்ளமையால் அமில மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு கப்பலிலிருந்து விழுந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலரது கைகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தர்ஷனி லஹன்டாபுர சுட்டிக்காட்டினார்.
கரையொதுங்கியுள்ள பொருட்களை சுற்று சூழல் அதிகாரசபை, கடல்வள பாதுகாப்பு திணைக்களம், கடற்படை உள்ளிட்ட முப்படையினரின் உதவியுடன் இதனை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எனவே மக்களை இதில் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கப்பலில் 278 தொன் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் கஞ்சிய பகுதிக்கு இன்னும் தீ ஆபத்து ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.