கடந்த சில நாட்களாக, யாராவது இறந்த செய்தியில் தான் கண் முழிக்கிறோம். உலகளவில் பரவிவரும் கொரோனா தொற்றுக்கு சாதாரண பொதுமக்கள் மட்டுமில்லாமல் பல திரையுலக பிரபலங்களும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நிதீஷ் வீரா, மாறன், இயக்குனர் அருண் ராஜாவின் மனைவி உள்பட ஒரு சிலர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் குக்கூ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ராஜுமுருகன், ஜோக்கர் மற்றும் ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இவருடைய சகோதரர் ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர். இவரின் பெயர் குமரகுருபரன், இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சில திரைப்படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் புதிய தலைமுறை, நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றி உள்ளார் . திடீரென கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.இதை சற்றும் எதிர்பார்க்காத திரையுலகினர் ராஜுமுருகனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.