சீனாவில் 70 வயதுப் பெண் ஒருவர் கடந்த 16 ஆண்டுகளில் 100 மரதன் போட்டிகளில் ஓடி சாதனை படைத்திருக்கிறார்! இதனால் இவரை ‘சூப்பர் பாட்டி’ என்று சீனர்கள் அழைக்கிறார்கள்.
பொதுவாக 50 வயதானாலே ஓய்வு குறித்து யோசிப்பவர்கள் அதிகம். ஆனால், 50 வயதில்தான் ஓடுவதற்கான ஆர்வமே வாங் லாங்குக்கு வந்திருக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் முதலில் ஓட்டப் பயிற்சியை எடுக்க ஆரம்பித்தார். ஆனால், வெகுவிரைவில் ஓட்டம் அவருடைய தீவிர ஆர்வமாக மாறிவிட்டது.
2004-ம் ஆண்டு தன்னுடைய முதல் மாரத்தான் ஓட்டத்தை ஆரம்பித்தார். இதுவரை 100 மரதன் ஓட்டங்களை ஓடி முடித்திருக்கிறார். 2005 முதல் 2017 வரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பெய்ஜிங் மரதன் போட்டியில் 13 முறை ஓடி முடித்திருக்கிறார். இந்த ஆண்டு வாங் லாங் வசிக்கும் லியோனிங் பகுதியில் நடைபெற்ற அல்ட்ரா மரதன் போட்டியில் கலந்துகொண்டு, 168 கி.மீ. தூரத்தை 40 மணி நேரத்தில் கடந்தார். இந்தச் சாதனையைப் படைத்த வயதானவர் வாங் லாங்தான்!
”கடந்த அல்ட்ரா மாரத்தான் போட்டியில் 110 கி.மீ. தூரம் ஓடுவதாகப் பதிவு செய்தேன். என்னுடன் நண்பர்களும் ஓடி வந்தனர். என்னைவிட அவர்களால் வேகமாக ஓட முடியும் என்றாலும் எனக்காக அவர்களைத் தாமதப்படுத்தி ஓடச் சொன்னேன். இந்த ஆண்டு 168 கி.மீ. தூரத்தைத் தனியாக ஓடிக் கடப்பதற்கான தைரியமும் நம்பிக்கையும் வந்துவிட்டது. நான் நினைத்ததைப் போலவே ஓடிவிட்டேன். இந்த மகிழ்ச்சி என்னை இன்னும் ஓடச் சொல்லி உந்தித் தள்ளுகிறது” என்கிறார், வாங் லாங்.
வாரத்தில் ஆறு நாட்கள், தினமும் 20 கி.மீ. தூரம் ஓடிப் பயிற்சி செய்யும் இவர், ஞாயிற்றுக்கிழமை ஓட்டப்பந்தயக் குழுவினரைச் சந்திக்கிறார். அடுத்து கலந்துகொள்ளும் போட்டிகள் குறித்து அறிந்துகொள்கிறார். மலைப் பாதைகளில் ஓடுவது மற்றவர்களுக்குக் கடினமாக இருந்தாலும் வாங் லாங்குக்கு அதுதான் விருப்பமாக இருக்கிறது. ஆண்டுக்கு 7 மாதங்கள் மலைப்பாதைகளில் ஓடுகிறார். குளிர்காலத்தில் மலைப் பாதையில் ஓட இயலாது என்பதால் மீதி 5 மாதங்கள் சமவெளிப் பகுதிகளில் ஓடுகிறார்.
சீனாவின் தைஷானில் நடைபெற்ற சர்வதேச மலையேற்றப் போட்டியில் கலந்துகொண்டு, 27-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் வாங் லாங். 100 மரதன் ஓட்டங்களை முடித்த பிறகும் வாங் லாங்கின் ஆர்வம் குறையவில்லை. மேலும் மேலும் ஓட வேண்டும் என்றே தோன்றுகிறது என்கிறார்.