சில கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் இன்று முன்னெடுக்க திட்டமிட்டிருந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு சுகாதார அமைச்சருடன் நடந்த கலந்துரையாடலில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளையடுத்து, இன்று நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
முன்கள பணியாளர்களான தாதியர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்.
முன்கள பணியாளர்களை தவிர்த்து, மருத்துவர்களின் குடும்ப உறுப்பினர்களிற்கு தடுப்பூசி ஏற்றுவதென்ற அரசின் முடிவிற்கு எதிராகவும், தாதியர் உள்ளிட்ட சுகாதாரத்துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் தடுப்பூசி ஏற்ற கோரியும், அனைத்து தாதியர்களிற்கும் 5,000 ரூபா இடர்கால கொடுப்பனவு, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள தாதியர்களிற்கு போதிய பாதுகாப்பு வசதிகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதில், தாதிய உத்தியோகத்தர்களின் தடுப்பூசி கோரிக்கைக்கு சாதகமாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
எனினும், மேற்கு மாகாணத்தில் கடமைகளில் ஈடுபடும் பொது சுகாதார ஆய்வாளர்கள் இன்று காலை 7:30 மணி முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். தமது குடும்ப அங்கத்தவர்களிற்கு தடுப்பூசி செலுத்துமாறு அவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.