நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் நாடாளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் அமுல் படுத்தப்பட்ட பயணத்தடை இன்று (25) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிமுதல் எதிர் வரும் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய எதிர்வரும் 31 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 4 மணியளவில் தற்காலிகமாக பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மன்னார் நகர் பகுதிகளிலும் வர்த்தக நிலையங்களிற்கும் வந்தனர்.
மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நடமாடுவதற்கு பொலிஸாரும், இராணுவமும் அனுமதி வழங்கி உள்ளனர்.
மேலும் வீதிகளில் கூட்டம் கூட்டமாக நடமாடுபவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.
அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை.மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களை தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள கூலித்தொழிலாளர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் சிறு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த பயணத்தடை காரணமாக தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையில், இவர்கள் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களும் நிவாரணம் வழங்க அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.